கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் சஸ்பெண்ட் : பின்னணி என்ன?

Published On:

| By Kavi

ரூ,25,000 லஞ்சம் கேட்ட விவகாரத்தில் கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் குமரிமன்னன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயராகவன். ஜேசிபி வாகனத்தை வாடகைக்கு விட்டு அதன் மூலம் பிழைப்பு நடத்தி வருகிறார். இந்த ஜேசிபி வாகனத்தை கடன் பெற்று வாங்கியதாக கூறப்படுகிறது. ஜேசிபி வாகனத்தை ஒப்பந்த அடிப்படையில் கூத்தாநல்லூர் நகராட்சிக்கு வாடகைக்கு விட்டிருந்தார்.

ADVERTISEMENT

அதன்படி கொடுக்கப்பட வேண்டிய வாடகை பாக்கியை கடந்த 4 மாதங்களாக கூத்தாநல்லூர் நகராட்சி கொடுக்கவில்லை என்பதால் அதனை உடனடியாக வழங்க வலியுறுத்தி பலமுறை கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் குமரிமன்னனிடம் கேட்டுள்ளார்.

Kumarimannan suspended

ஆனால் கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் குமரிமன்னன், 25,000 லஞ்சம் கொடுத்தால், வாடகை தொகைக்கான காசோலையை தருகிறேன் என கூறியிருக்கிறார்.அதோடு தன்னை ஆணையர் தரைகுறைவாக பேசியதாக விஜயராகவன் குற்றம்சாட்டினார்.

ADVERTISEMENT

இந்தசூழலில் முதல்வரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர், கூத்தாநல்லூர் நகர்மன்ற தலைவர் என பலருக்கும் புகார் மனு அனுப்பியுள்ளார் விஜயராகவன். இதையடுத்து உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம், குமரிமன்னன் உள்நோக்கத்துடன் செயல்பட்டுள்ளார்.  விஜயராகவனுக்கு ஜேசிபி இயந்திரத்துக்கான வாடகையை வட்டியுடன் கொடுக்க வேண்டும். ஆணையர் குமரிமன்னன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு பரிந்துரை செய்துள்ளது.

எனினும் விஜயராகவன் கைக்கு வாடகை பணம் போகவில்லை. இந்நிலையில் நேற்று தனது குடும்பத்தோடு நகராட்சி ஆணையர் அலுவலகத்துக்கு வந்த  விஜயராகவன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை அங்கிருந்து வெளியேறுமாறு நகராட்சி ஊழியர்கள் கூறிக்கொண்டிருந்த நிலையில், அப்போது தான் மறைத்து கொண்டு வந்திருந்த டீசலை தன் மீது ஊற்றி தீ வைக்க முயன்றுள்ளார்.

ADVERTISEMENT
Kumarimannan suspended

இந்த சம்பவம் நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரை அங்கிருந்தவர்கள் தடுத்து நிறுத்தி காப்பாற்றியுள்ளனர்.

பின்னர் போலீசாரும் நகர்மன்ற தலைவர் பாத்திமா ஆகியோர் தற்கொலைக்கு முயன்ற விஜயராகவன் குடும்பத்தினரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது நகர்மன்ற தலைவர் பாத்திமா, “3 நாட்களாக கமிஷனர் இங்கு இல்லை. அவர் எங்கு போயிருக்கிறார் என்று என்னிடம் சொல்லவில்லை” என்று கூறியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Kumarimannan suspended

இந்நிலையில் இன்று (ஜூன் 10) குமரிமன்னன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தம்) சட்டம், 2022-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, நகராட்சி ஆணையரின் செயல்பாடுகளை முறையாகச் செயல்படுத்தத் தவறியதாலும், நிர்வாகக் காரணங்களுக்காகவும், கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் குமரிமன்னன் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார் என்று நகராட்சி நிர்வாக இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

Kumarimannan suspended

கடந்த ஆண்டு இவர் பெரம்பலூர் நகராட்சி ஆணையராக இருந்தார். அப்போது குமரிமன்னன் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் வட்டார நகராட்சி இயக்குனர் கவனத்துக்கு சென்றன.

அதன்பேரில், 6 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டு குமரிமன்னனால் கையாளப்பட்ட நகரமைப்பு பிரிவு கோப்புகள், வருவாய் பிரிவு சொத்து வரி விதித்தல் மற்றும் இதர கோப்புகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பின்னர் வாலஜாபேட்டை நகராட்சி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டார். அங்கு சில மாதங்கள் பணியாற்றிய குமரிமன்னன், அங்கிருந்து கூத்தாநல்லூருக்கு மாற்றப்பட்ட நிலையில் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

பிரியா

திருப்பதியில் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி சாமி தரிசனம்!

ஐஸ்வர்யா முதல் அனுஷ்கா வரை: பாலிவுட் பிரபலங்களை பாட்டியாக்கிய AI கலைஞர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share