தக்காளியை எப்படிச் சாப்பிட்டாலும் தக்காளியின் குணம் நம்மை வந்து சேரும்; மருந்து கண்டுபிடிக்கப்படாத, குணப்படுத்த முடியாத நோய்களுள் ஒன்றான புற்றுநோயை வராமல் தடுப்பதோடு, வந்ததை மேலும் பரவாமல் தடுக்கும் வல்லமை இதற்கு உண்டு. கொங்கு மண்டல ஸ்பெஷலான இந்த கொங்கு தக்காளிக் குழம்பு செய்து உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
என்ன தேவை?
- தக்காளி – 6
- தேங்காய் – ஒரு மூடி
- சின்ன வெங்காயம் – 2 கைப்பிடி அளவு
- மல்லித்தூள், கடுகு, உளுந்து – தலா ஒரு டீஸ்பூன்
- மஞ்சள்தூள்- கால் டீஸ்பூன்
- பட்டை – சிறிது
- பூண்டு – 6 பல்
- சோம்பு – 2 டீஸ்பூன்
- மிளகாய்த்தூள், உப்பு,
- கறிவேப்பிலை – தேவையான அளவு
- எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
எப்படிச் செய்வது?
வெங்காயத்தைத் தோலுரிக்கவும். தேங்காயைத் துருவி வைக்கவும். 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, பாதி வெங்காயம், 4 தக்காளியை முழுதாகப் போட்டு நன்கு வதக்கவும். பிறகு தேங்காய்த்துருவல், மல்லித்தூள், மிளகாய்தூள், பட்டை, சோம்பு போட்டுப் புரட்டி இறக்கவும். ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும். மீதி இருக்கும் வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். பூண்டை வட்டமாக நறுக்கவும். மீதித் தக்காளியைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், பூண்டு, தக்காளி, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அரைத்த கலவை, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கினால் கமகம கொங்கு தக்காளி குழம்பு ரெடி.
குறிப்பு: இது சாதத்துக்கும் இட்லி தோசைக்கும் சரியான ஜோடி!
