புரட்டாசி மாதத்தில் வீட்டில் அசைவ உணவு செய்யாவர்களின் பாடு கொஞ்சம் திண்டாட்டம்தான். அப்படிப்பட்ட நிலையில் புரதச்சத்துமிகுந்த இந்தக் கொண்டைக்கடலை சாதம் கைகொடுக்கும். வளரும் குழந்தைகளின் சீரான வளர்ச்சிக்கும் உடல்பலத்துக்கும் பெரிதும் துணைபுரியும்.
என்ன தேவை?
ஊறவைத்த வெள்ளைக் கொண்டைக்கடலை – ஒரு கப்
சீரகச் சம்பா அரிசி – ஒரு கப்
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
கீறிய பச்சை மிளகாய் – 2
தண்ணீர் – இரண்டரை கப்
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள், தனியாத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்
புதினா – ஒரு கைப்பிடி அளவு
பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 2
சோம்பு – கால் டீஸ்பூன்
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு
நெய் – ஒரு டீஸ்பூன்
தயிர் – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
குக்கரில் தேவையான அளவு எண்ணெய்விட்டு அதில் பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு ஆகியவற்றைப்போட்டு வதக்கி பிறகு அதில் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கி, பின்னர் புதினா, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், தயிர் என ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். இதில் ஊறிய கொண்டைக்கடலை சேர்த்து நன்கு சுருளவதக்கி, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, இதில் அரிசி, கொத்தமல்லி, நெய் சேர்த்துக் கிளறி மூடிப்போட்டு இரண்டு விசில்விட்டு இறக்கினால், கமகம கொண்டைக்கடலை சாதம் தயார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: கத்திரிக்காய் கூட்டாஞ்சோறு
கிச்சன் கீர்த்தனா: நாட்டுக் கதம்ப சாதம்