கொல்கத்தா மருத்துவ மாணவி கொலை வழக்கை இன்று(ஆகஸ்ட் 22) விசாரித்த உச்ச நீதிமன்றம், கொலை வழக்கைப் பதிவு செய்ததில் ஏன் இத்தனை குளறுபடிகள் என்று மேற்கு வங்காள அரசிடம் கேள்வி எழுப்பியது.
கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த முதுநிலை மாணவி ஒருவர் கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி மருத்துவமனையின் மூன்றாம் தளத்தில் உள்ள ஒரு அறையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
பிரேதப் பரிசோதனையில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார் என்பது தெரியவந்தது. இந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா காவல்துறை, சஞ்சய் ராய் என்ற நபரை கைது செய்து விசாரித்து வந்தது.
இதற்கிடையில் நாடு முழுக்க உள்ள மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வழக்கு விசாரணை சரியான திசையில் செல்லவில்லை என்றும் கூறி வந்தனர். இதை தொடர்ந்து சிபிஐக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.
இந்த கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கின் தீவிரத்தை கருதி, உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தேவையான வழிமுறைகளை வகுக்க ஆர்த்தி சரின் தலைமையில் தேசிய பணிக்குழுவை அமைக்க உத்தரவிட்டது. மேலும் வழக்கை ஆகஸ்ட் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
அதைத் தொடர்ந்து இன்று வழக்கை இரண்டாம் நாளாக விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பர்திவாலா “கொலையான மாணவியின் உடல் கண்டெடுக்கப்பட்ட நேரம் காலை 10.10 என்று காவல்நிலைய டைரியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதோ இரவு 11.45 மணி. அதுவரை காவல்துறை என்ன செய்துகொண்டிருந்தது?”என்று மேற்கு வங்காள அரசு சார்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபலிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்குச் சரியான பதில் அளிக்க முடியாமல் கபில் சிபல் திணறினார்.
தொடர்ந்த பேசிய நீதிபதி பர்திவாலா “காவல்நிலைய டைரியில் இந்த கொலை இயற்கைக்கு மாறான மரணம் என்று இரவு 11.30 மணிக்குத் தான் குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்பே மாணவியின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இயற்கைக்கு மாறான மரணங்களுக்கு தான் பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று உங்களுக்கு தெரியாதா?” என்று கபில் சிபலிடம் கேட்டார்.
இதற்குப் பதில் அளித்த கபில் சிபல், “இல்லை, மதியம் 1.45 மணிக்கே இந்த மரணம் இயற்கைக்கு மாறான மரணம் என்று காவல்நிலைய டைரியில் குறிப்பிடப்பட்டுள்ளது” என்றார்.
அதற்கு நீதிபதி பர்திவாலா “எங்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களில் அப்படி இல்லை.வழக்கு சம்பந்தமான ஆவணங்களை அடுத்த முறை சரியாக சமர்ப்பிக்க வேண்டும்” என்று எச்சரித்தார்.
இதற்கிடையில் போராடும் மருத்துவர்களுக்காக ஆஜாரான வழக்கறிஞர்களின் வாதங்களைக் கேட்ட தலைமை நீதிபதி சந்திரசூட் “ மருத்துவர்கள், போராட்டத்தைக் கைவிட்டு விட்டுத் திரும்ப பணிக்குச் செல்ல வேண்டும். உங்களின் கோரிக்கைகளைத் தேசிய பணிக்குழு நிச்சயமாகக் காதுகொடுத்துக் கேட்கும்.” என்றார்.
மேலும் போராடும் மருத்துவர்கள் மற்றும் மக்களின் கருத்துகளைப் பதிவு செய்ய ஒரு வலைதளத்தை உருவாக்குங்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செயலாளருக்கு உத்தரவிட்டார்.
இறுதியாக இந்த கொலை வழக்கை அரசியல் படுத்தவேண்டாம். அப்படிச் செய்தால் அவர்கள் சட்டப்படி தண்டிக்கப் படுவார்கள் என்று எச்சரித்து, அடுத்தகட்ட விசாரணையைச் செப்டம்பர் 5-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ஜம்மு காஷ்மீர் தேர்தல் : காங்கிரஸுடன் கூட்டணி – உறுதி செய்த ஃபரூக் அப்துல்லா
ஆளுநரைச் சந்தித்த தலைமைச் செயலாளர் முருகானந்தம்: ஏன்?
கருவிலேயே கலையாதவன்… எதை தொட்டாலும் பண மழைதான்… ரொனால்டோ படைத்த புதிய சாதனை!