தான் நடிக்கும் படங்களில் ஏதேனும் ஒரு அம்சம் வழக்கத்திற்கு மாறாக இருக்குமாறு பார்த்துக்கொள்வதில் விஜய் ஆண்டனி ஒரு ஜித்தன் என்றே சொல்லலாம். நாயகனாக அறிமுகமான ‘நான்’, ‘சலீம்’ முதல் கடந்த ஆண்டு வெளியான ‘ரத்தம்’ வரை அனைத்து படங்களிலும் அது தெரிய வரும்.
சமீபத்தில் வெளியான ‘ரோமியோ’ கூட வழக்கமான காதல் கதை போன்று தோன்றினாலும், ‘காதல் ஜோடிக்குள் புறத்தோற்றத்தை மீறிய பொருத்தமொன்று தேவை’ என்று சொல்லியிருந்தது வித்தியாசத்தை உருவாக்கியிருந்தது. அவரது பட வரிசையில் முற்றிலும் வேறுபட்ட காட்சியனுபவத்தைத் தந்த படம் என்று ‘கொலைகாரனை’க் குறிப்பிடலாம்.
கவனத்தை ஈர்த்தது!
தனது தோற்றம், உடல்மொழி, கதாபாத்திரத்தின் தன்மை, வழக்கத்தில் இருந்து மாறுபட்ட கதைக்களம் போன்றவற்றைச் சார்ந்து கதைகளைத் தேர்ந்தெடுப்பவர் விஜய் ஆண்டனி. முந்தைய படத்தின் வெற்றி உட்பட மேலும் சில அம்சங்களும் அந்த கணக்கில் சேரும்.
’நான்’, ‘சலீம்’ படங்களின் வித்தியாசமான உள்ளடக்கம், மிக எளிதாக விஜய் ஆண்டனியை ஆக்ஷன் ஹீரோ ஆக்கியது. ஆனால், மூன்றாவது படமான ‘இந்தியா பாகிஸ்தான்’ ஒரு காமெடி ட்ராமாவாக அமைந்திருந்தது. அது கவனிக்கப்படாதபோது, ‘பிச்சைக்காரன்’ பெரிய எதிர்பார்ப்பில்லாமல் வெளியானது. தென்னிந்தியாவின் பல நாயகர்கள், ‘இப்படியொரு கதை நம்மிடம் வரவில்லையே’ என்று ஏங்குமாறு அப்படம் அமைந்தது.
மறுபிறவி கதையம்சத்தைக் கொண்ட ‘சைத்தான்’, அரசியல் பின்னணியில் அமைந்த ஆக்ஷன் கதையான ‘யமன்’ இரண்டுமே வித்தியாசமான படங்களாகக் கருதப்பட்டாலும் பெருவெற்றியைப் பெறவில்லை. பின்னர் வெளியான ‘அண்ணாதுரை’, ‘காளி’, ‘திமிரு புடிச்சவன்’ படங்கள் சுமார் வெற்றிகளாகக் கருதப்பட்டன.

அப்படியொரு சூழலில், மீண்டும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியானது ‘கொலைகாரன்’.
அடுத்தடுத்து இரண்டு கொலைகள் நடக்கின்றன. அதில் சம்பந்தப்பட்டவர்கள் இவராக இருக்குமோ, அவராக இருக்குமோ என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர். விசாரணை தொடரத் தொடர, வழக்கில் உள்ள முடிச்சுகள் விடுபடுகின்றன. இறுதியாக, அந்த வழக்கில் தொடர்புடையவர் என்று ஒருவரைக் குறிவைக்கின்றனர் போலீசார்.
அந்த நபர் ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி. அது மட்டுமல்லாமல் பல குற்ற வழக்குகளில் உண்மை வெளியுலகுக்குக் காரணமாக இருந்தவர். அப்படியொருவர் ஏன் கொலை செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு போலீசார் விடை கண்டுபிடிப்பதோடு இப்படம் முடிவடையும்.
சின்ன இடைவெளிக்குப் பிறகு, விஜய் ஆண்டனிக்குப் பொருத்தமான ஆக்ஷன் த்ரில்லர் படமாக இது அமைந்தது. ரசிகர்களின் பாராட்டுகளையும் குவித்தது.
அர்ஜுன் உடன் விஜய் ஆண்டனி நடித்த படம் என்றொரு அம்சம், மிகப்பெரிய கவன ஈர்ப்பை உருவாக்கியது.
இயக்குனரின் திரைமொழி!
முடிவும் தொடக்கமும் இல்லாத காட்சிகள் ஆங்காங்கே வரும்போது திரைக்கதை சுவாரஸ்யத்தை தன்னுள் நிறைக்கும். ஆனால், அதுவே முழுக்க இடம்பெறும்போது ரசிகர்கள் மண்டையைப் பிய்த்துக்கொள்ளும் நிலை ஏற்படும். அதனை வெகுலாவகமாகச் சந்தித்து, ‘கொலைகாரன்’ படத்தைத் தந்திருந்தார் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ். அவரது திரைமொழி உண்மையிலேயே வித்தியாசமானதாக அமைந்தது.
‘லீலை’ என்றொரு ரொமாண்டிக் காமெடி படம் தந்தபோதும், இந்த வாய்ப்புக்காக நெடுங்காலம் இயக்குனர் காத்திருந்தார். அதற்கேற்ற பலன்களை வாரித் தந்தது இத்திரைப்படம். பிறகு ‘வதந்தி’ எனும் வெப்சீரிசையும் இயக்கி ரசிகர்களின் பாராட்டுகளை வாரிக் குவித்தார்.

முகேஸ்வரனின் ஒளிப்பதிவு, படத்தின் டிஐ நுட்பப் பணிகள், ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பு, சைமன் கிங்கின் பின்னணி இசை, வினோத் ராஜ்குமாரின் கலை வடிவமைப்பு என்று படத்தின் தொழில்நுட்பப் பணிகள் ஒன்றிணைந்து நல்லதொரு ‘த்ரில்லர்’ பார்த்த உணர்வை உண்டாக்கியது.
’சஸ்பெக்ட் எக்ஸ்’ எனும் ஜப்பானியப் படத்தைத் தழுவி ‘கொலைகாரன்’ திரைக்கதை அமைந்தாலும், முடிந்தவரை தமிழுக்காக மேற்கொள்ளப்பட்ட சில மாற்றங்கள் படத்தை விட்டு ரசிகர்களை விலகாமல் பார்த்துக்கொண்டது. அதுவே, அப்படத்தை வெற்றிப்படமாக மாற்றியது.
பிறகு கோடியில் ஒருவன், தமிழரசன், பிச்சைக்காரன் 2, கொலை, ரத்தம், ரோமியோ என்று விஜய் ஆண்டனியின் படங்கள் வெளியாகி வருகின்றன. இவர் நடித்த முடித்த நான்கைந்து படங்கள் வெளியீட்டுக்காகக் காத்திருக்கின்றன. இப்போது, மீண்டும் அவர் மீது பெரிய எதிர்பார்ப்பு இல்லாத நிலை உருவாகியிருக்கிறது.
இந்தச் சூழலில், மிகச்செறிவான காட்சியனுபவத்தைக் கொண்ட படம் அவரிடத்தில் இருந்து வெளியானால் அதுவொரு மிகப்பெரிய கொண்டாட்டத்தை நிகழ்த்தும். ’மழை பிடிக்காத மனிதன்’ உட்படச் சில படங்கள் அதற்கேற்றாற் போல இருக்கின்றன.
‘கொலைகாரன்’ படத்தின் விஜய் ஆண்டனி, அர்ஜுன் போலவே நாயகி ஆஷிமா நார்வால் உட்படப் பலரும் அற்புதமான நடிப்பைத் தந்திருந்தனர். அவர்களைக் கண்டு சிலாசிக்க, ‘கொலைகாரனை’ இன்னொரு முறை ரசிக்கலாம்!
-உதய் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கங்கனாவை கன்னத்தில் அறைந்த காவலர்!
பாஜக ஐடி விங்கிற்கு தமிழிசை எச்சரிக்கை!
ஃபேக் எக்சிட் போல்… பங்கு சந்தை முறைகேடு: மோடி, அமித்ஷாவை குற்றம்சாட்டும் ராகுல்
