அடுக்கடுக்காய் புகார்கள்… ஒ.செ.வை காப்பாற்றி அவரது மகனுக்கு பதவி கொடுத்த அமைச்சர் முத்துசாமி

Published On:

| By Aara

மகளிர் அணி பிரமுகரின் புகாருக்கு உள்ளான ஒன்றிய செயலாளரை ராஜினாமா செய்யச் சொல்லி அவரது மகனை ஒன்றிய செயலாளர் ஆக்கி இருக்கிறார் முத்துசாமி என ஈரோடு மாவட்ட திமுகவில் பெரும் பேச்சாக இருக்கிறது.  

கடந்த ஜனவரி 3ஆம் தேதி மின்னம்பலத்தில் அமைச்சர் முத்துசாமியின் ஆதரவு ஒன்றிய செயலாளர் திடீர் ராஜினாமா ஏன்? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி வடக்கு ஒன்றிய செயலாளரான  சின்னசாமி மீது லோக்கல் மகளிர் அணி பிரமுகர் சார்பில்  மாவட்ட செயலாளரான அமைச்சர் முத்துசாமி,  துணைப் பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளிடம் ஒரு வாரத்துக்கு முன்பு புகார் கொடுக்கப்பட்டது. போலீசுக்கும் இந்த புகார் சென்றது.  அந்த புகாரில் அதிர்ச்சி தரத்தக்க  தகவல்கள் இருந்தன. அந்த புகார் தொடர்பாக சில வீடியோக்களும் திமுக முக்கிய நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

அந்த வீடியோக்களைப் பார்த்து அதிர்ந்து போன முத்துசாமி, புகாருக்குள்ளான ஒ.செ. சின்னசாமி தனது தீவிர ஆதரவாளர் என்பதால், அவரை தனது ஈரோடு அலுவலகத்துக்கு வரவழைத்துப் பேசினார்.

“இந்த விஷயம் தலைமைக்கு சென்றால் உங்களுடைய அடிப்படை உறுப்பினர் பதவியை நீக்கிடுவாங்க. அதனால நீங்களே உடம்பு சரியில்லை என்று ராஜினாமா கடிதம் கொடுங்க,” என்று முத்துசாமி அவரிடம் ராஜினாமா கடிதம் எழுதி வாங்கினார்.

தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றால் தனது மகனுக்கு ஒன்றிய செயலாளர் பதவி வழங்க வேண்டும் என சின்னசாமி, அமைச்சரிடம் உரிமையாக நிபந்தனை விதித்திருந்தார். இதையெல்லாம் அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

இந்த நிலையில் இன்று ஜனவரி  6ஆம் தேதி திமுகவின் அதிகார பூர்வ நாளேடான முரசொலியில்… இந்த விவகாரம் பற்றிய முக்கிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.

அதாவது மின்னம்பலம் செய்தியில்  குறிப்பிட்டிருந்தவாறே… கொடுமுடி  வடக்கு ஒன்றிய செயலாளர் சின்னசாமி வயது முதிர்வு மற்றும் உடல்நிலை காரணமாக ராஜினாமா செய்து விட்டதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், அதனால் அந்த ஒன்றியத்தை கொடுமுடி வடக்கு,  தெற்கு என இரண்டாகப் பிரித்து கொடுமுடி வடக்கு  ஒன்றியத்துக்கு சின்னசாமியின் மகன் முத்துக்குமார் ஒன்றிய பொறுப்பாளராகவும், கொடுமுடி தெற்கு ஒன்றியத்திற்கு சின்னசாமியின் தீவிர ஆதரவாளரான சிவகுமார் ஒன்றிய பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றே சென்னை வந்த சின்னசாமியின் எதிர் தரப்பினர், துணைப் பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ் மூலம் இந்த விவகாரத்தின் தீவிரத்தை துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை ஆகியோர் வழியாக தலைமைக்குக் கொண்டு செல்ல முயன்றனர். ஆனாலும் அமைச்சர் முத்துசாமி நினைத்ததை முடித்துவிட்டார்.

இதனால் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வீடியோக்களை வெளியிடலாமா என்று சென்னையில் ரூம் போட்டு ஆலோசித்து வருகிறார்கள் அந்த எதிர்தரப்பினர்.

வேந்தன்

பொங்கல் விடுமுறை வசூல் வேட்டைக்குத் தயாராகும் ஆம்னி

ஜனவரி 11 ஆம் தேதி தென் மாவட்ட ரயில்கள் போக்குவரத்தில் மாற்றம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share