ADVERTISEMENT

இதுவரை 14 பேர் பலி… அலட்சியம் செய்யும் சுற்றுலாத்துறை… ஓட்டுநர் சங்கம் எச்சரிக்கை!

Published On:

| By christopher

kodiakaanal drivers association warning to tn tourism

ஐந்து வீடு அருவியில் சிக்கி 14 பேர் உயிரிழப்புக்கு காரணமான கொடைக்கானல் சுற்றுலாத்துறையைக் கண்டித்து கொட்டும் மழையில் கவன ஈர்ப்பு முற்றுகை ஆர்ப்பாட்டம் இன்று (அக்டோபர் 22) நடைபெற்றது.

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலை கிராமத்தில் அமைந்துள்ளது ஐந்து வீடு அருவி. இந்த அருவிக்கு கடந்த 18ஆம் தேதி பொள்ளாச்சியில் இருந்து மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் பலர் மாலை வேலையில் அருவிக்கு குளிக்க சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த தடாகத்தில் சிக்கி நந்த குமார் (21) என்ற மாணவர் உயிரிழந்தார்.

ADVERTISEMENT

தீயணைப்பு துறையினரின் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து 3 நாட்களுக்கு பிறகு மாணவரின் உடல் நேற்று மீட்கப்பட்டு, கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

இந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில், உள்ளூர் மக்களிடையே ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

அடிப்படை வசதிகள் ஏதுமற்ற இந்த ஆபத்தான அருவியில் சிக்கி இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் ஐந்து வீடு பகுதிக்கு செல்லக்கூடிய பகுதியில் பாதுகாப்பு கம்பிகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது வரை அவை அமைக்கப்படாததால் உயிரிழப்புகள் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் ஐந்து வீடு அருவியில் அடிப்படைத் தேவைகளை ஏற்படுத்தாமல் அலட்சியமாக செயல்பட்டு 14 நபர்களின் மரணத்திற்கு காரணமான கொடைக்கானல் சுற்றுலாத்துறையைக் கண்டித்து கொட்டும் மழையில் கவன ஈர்ப்பு முற்றுகை ஆர்ப்பாட்டம் இன்று (அக்டோபர் 22) நடைபெற்றது.

ADVERTISEMENT

ஓட்டுநர் சங்கத்தைச் சேர்ந்த சுமார் 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கொடைக்கானல் சுற்றுலாத்துறை அதிகாரிகளுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது.

அப்போது வாகன ஓட்டுனர் சங்கத்தின் தலைவர் ரமேஷ் மற்றும் வேன் ஓட்டுனர் சங்கத்தின் தலைவர் பெமினா அந்தோனி ஆகியோர் அளித்த பேட்டியில், “பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாத வகையில்இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அலட்சியமாக செயல்பட்ட கொடைக்கானல் சுற்றுலாத்துறை அதிகாரிகளை மாற்றக் கூறியும், கொடைக்கானலுக்கு சுற்றுலாத்துறை வேண்டாம் என்பதை வலியுறுத்தியும், சுற்றுலாத்துறையை நம்பி வந்து இறந்த 14 நபர்களுக்கு நிவாரணம் வழங்கக் கூறியும், நாளை உடனடியாக ஐந்து வீடு அருவிக்கு தடுப்பு வேலிகள் அமைக்கக் கூறியும் கோரிக்கை வைத்தோம்.

நேற்றே எங்களுக்கான போராட்டக் களம் அமைந்திருந்தாலும் உடலை வைத்து போராட்டம் நடத்தக் கூடாது என்கிற உயரிய எண்ணத்தில் இன்று காலை மருத்துவக் கல்லூரி மாணவர் தகனம் முடிந்த பின் இந்த ஆர்ப்பாட்டத்தை கையிலெடுத்தோம். நாளை காலை 10 மணிக்கு தடுப்பு வேலி அமைக்கவில்லை என்றால் எங்களின் அடுத்தக்கட்ட போராட்டம் நடைபெறும்” என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share