கொடநாடு வழக்கு: கூடலூரில் விசாரிக்கிறது சிபிசிஐடி!

Published On:

| By Kalai

kodanadu case cbcid investigation in gudalur

கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக கோவையில் இருந்து வந்துள்ள சிபிசிஐடி போலீசார் கூடலூரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

கடந்த 2017 ஆம் ஆண்டு கோத்தகிரி அருகே உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்த சம்பவத்தின் போது இரவு காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார்.

இதில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 11 பேருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.

ADVERTISEMENT

இதையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் கனகராஜ் சேலம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார்.

அதனையடுத்து சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு வழக்கு விசாரணையை தொடக்கத்தில் சோலூர் மட்டம் போலீசார் மேற்கொண்டு வந்தனர்.

ADVERTISEMENT

பின்னர் 2020 ஆம் ஆண்டு தனிப்படை போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. தனிப்படை போலீசார் ஓராண்டுக்கு மேலாக சசிகலா உள்பட 316 பேரிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் உறவினர் ரமேஷ் ஆகியோருக்கு தொடர்பு உள்ளதாக கூறி குற்றவாளிகளாக சேர்க்கபட்டனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை கடந்த செப்டம்பர் மாதம் திடீரென சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதனை அடுத்து கடந்த சில நாட்களாக சிபிசிஐடி போலீசார் தங்களது விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Kodanadu case CBCID is investigating in gudalur

முதல் கட்டமாக சம்பவம் நடைபெற்ற 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி நள்ளிரவு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தி விட்டு சயானின் கூட்டாளிகளான ஜம்சீர் அலி, சதீசன், ஜித்தின் ஜாய், உதயகுமார் உள்ளிட்ட 8 பேர் கூடலூர் வழியாக கேரளாவிற்கு தப்பி சென்றனர்.

அப்போது அவர்களை 24-ந் தேதி அதிகாலை கூடலூர் போலீசார் வழிமறித்து விசாரணை நடத்தி பின்னர் அதிமுகவினரின் உதவியுடன் விடுவிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில் அதுகுறித்து சிபிசிஐடி போலீசார் கூடலூரில் இன்று (டிசம்பர் 29) விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூடலூர் நெடுஞ்சாலை துறையினருடைய பயணியர் மாளிகையில் அப்பொழுது பணியில் இருந்த காவல்துறையினர், மற்றும் அவர்களுக்கு உதவி செய்த நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொடநாடு கொலை, கொள்ளையில் ஈடுபட்டவர்களுக்கு உதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட அனீஸ் மற்றும் ஷாஜி என்பவர்களிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக இவ்வழக்கில் சிபிஐ எஸ்.பி முரளி ரம்பாவுக்கு சிறப்பு புலனாய்வு துறை சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

கலை.ரா

ஜனவரி மத்தியில்… : எச்சரிக்கும் மருத்துவத் துறை!

ஆன்லைன் தடைசட்ட மசோதா: ராமதாஸ் காட்டம்!

Photo of author
Kalai
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share