ADVERTISEMENT

கொடைக்கானல் ஐந்து வீடு அருவியில் தொடர் உயிரிழப்புகள் : சுற்றுலாத் துறை விளக்கம்!

Published On:

| By Kavi

கொடைக்கானல் ஐந்து வீடு அருவியில் சிக்கி மருத்துவ மாணவர் உயிரிழந்தது தொடர்பாக சுற்றுலாத் துறை விளக்கமளித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஐந்து வீடு அருவி உள்ளது. இந்த அருவியை காண்பதற்கு தீபாவளி விடுமுறையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த மருத்துவ மாணவர் நந்தக்குமார் உட்பட 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சென்றனர்.

ADVERTISEMENT

அப்போது ஆற்றுப்படுகை பகுதியில் நீரில் மூழ்கி மாயமாகி உள்ளார் நந்தக்குமார். அவரை தீயணைப்புத் துறையினரும், உள்ளூர் மக்களும் தீவிரமாக தேடினர். மழை காரணமாக தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டது.

இந்தநிலையில் நேற்று முன் தினம் நந்தக்குமாரின் உடல் மீட்கப்பட்டு, கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்தசூழலில் சுற்றுலாத்துறையைக் கண்டித்து கொட்டும் மழையில் ஓட்டுநர் சங்கத்தினர் நேற்று (அக்டோபர் 22) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், ‘இந்த ஆபத்தான அருவியை காண வந்து இதுவரை 14 பேர் உயிரிழந்திருக்கின்றனர். எனவே இனியொரு உயிரிழப்பு ஏற்படாத வண்ணம் உடனடியாக ஐந்து வீடு அருவிக்கு தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும்’ என்று வலியிறுத்தினர்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக மின்னம்பலத்தில் ’இதுவரை 14 பேர் பலி… அலட்சியம் செய்யும் சுற்றுலாத்துறை… ஓட்டுநர் சங்கம் எச்சரிக்கை!’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்தநிலையில், ஐந்து வீடு அருவியில் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்பாக சுற்றுலாத் துறை விளக்கமளித்துள்ளது.

அதில், ‘திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் வில்பட்டி ஊராட்சியில் உள்ள ஐந்து வீடு குடியிருப்பில் உள்ள ஐந்து வீடு அருவி பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் அருகாமையில் வருவாய்த்துறையின் நிலத்தில் உள்ளது. அருவியின் அருகாமை மற்றும் அதனை சுற்றியுள்ளப் பகுதிகளில் வனவிலங்குகளான யானை மற்றும் காட்டு எருமை ஆகியவற்றின் வழித்தடமாக உள்ளது. மேலும் ஆபத்தான அருவியில் குளிப்பதற்கு அனுமதி இல்லாத நிலையில் சுற்றுலாப்பயணிகள் தடையினை மீறி அருவிக்கு அருகாமையில் சென்று விபத்துகள் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்கு சுற்றுலாத்துறை பொறுப்பில்லை. மற்றும் இனிவரும் காலங்களில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் உடனடியாக தடுப்பு வேலி அமைத்திடவும் தகவல் பலகைகள் நிறுவிடவும் உத்தரவிட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், யூடியூப் வீடியோக்களில் பார்த்துவிட்டு இளைஞர்கள் இங்கு வருகைத் தருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே சுற்றுலாத் துறை அனுமதி இல்லாத இந்த அருவிக்கு வர வேண்டாம்’என்றும் சுற்றுலாத் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share