டாடா நிறுவன ஆணிவேர் ரத்தன் டாடா மறைவை ஒட்டி, கொமதேக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
உலக அரங்கில் இந்தியாவின் மிகப்பெரும் அடையாளமான, தொழிலதிபர் ரத்தன் டாடா நேற்று (அக்டோபர் 9) இரவு காலமானார். பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கொமதேக பொதுச் செயலாளரான ஈஸ்வரன் எம்.எல்.ஏ. இன்று வெளியிட்டிருக்கும் செய்தியில்,
“இந்தியாவின் முன்னேற்றத்திற்காக ஒவ்வொரு நாளும் உழைத்த தொழிலதிபர் ரத்தன் டாடா அவர்கள் கடைசி நிமிடம் வரை எளிமையாக வாழ்ந்தவர்.
நாம் எளிமையாக வாழ்வது ஆச்சரியமல்ல ஆனால் மூன்றாம் தலைமுறை தொழிலதிபர் ரத்தன் டாடா அவர்கள் எளிமையாக வாழ்ந்தார் என்பது கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பை கொடுத்து அவர்தம் குடும்பங்களை வாழ வைத்தவர்.
ஒரு அரசால் கூட மக்களின் வாழ்வாதாரத்திற்கு செய்ய முடியாத பல அற்புதங்களை இந்த நாட்டிற்காக செய்தவர். தான் வளர்த்த செல்லப்பிராணிகளை கூட தனக்கு நிகராக நேசித்தவர்.
75 ஆண்டுகள் நிரம்பினால் டாடா குழுமத்தின் தலைமை பொறுப்புகளில் இருப்பதை தவிர்க்க வேண்டுமென்ற நியதியை தனக்குத் தானே செயல்படுத்திக் கொண்டவர்.
அதன் காரணமாக தனக்கு 75 வயது நிரம்பிய போது தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த சந்திரசேகர் அவர்களை டாடா நிறுவனத்தின் தலைவராக நியமித்தார். இந்தியாவில் இவரோடு யாரையும் ஒப்பிட்டு பேசக்கூடிய அளவிற்கு இல்லை என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட ஒரு அரிய மனிதர் நம்மை விட்டு பிரிந்திருக்கிறார் என்பது வேதனையான செய்தி.
இந்திய தேசத்திற்கு ஈடு கட்ட முடியாத பெரிய இழப்பு. டாட்டா குழும குடும்பத்திற்கு எங்கள் வருத்தத்தையும், ஆறுதலையும் பதிவு செய்கின்றோம். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கொடிகள் மரியாதைக்குரிய ரத்தன் டாடா அவர்களின் உடல் அடக்கம் செய்யும் வரை அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும்” என்று தெரிவித்துள்ளார் ஈஸ்வரன்.
டாடா மீதுள்ள மரியாதையாலும், டாடா நிறுவனத்தின் தலைவரான சந்திரசேகர் கொங்கு பகுதியைச் சேர்ந்தவர் என்பதாலும் ஈஸ்வரன் இந்த முடிவெடுத்திருக்கிறார் என்கிறார்கள் கட்சி நிர்வாகிகள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்
வேட்டையன் : ட்விட்டர் விமர்சனம்!
பாட்டி மீது அலாதி பாசம்… அமெரிக்காவில் இருந்து ரத்தன் டாடா இந்தியா திரும்பிய பின்னணி!