முல்லன்பூரில் நேற்று (ஏப்ரல் 15) நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது கொல்கத்தா அணி. kkr captain rahane frustrated on loss against pbks
வெறும் 111 ரன்களை துரத்திச் சென்று, 95 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது கொல்கத்தா அணியின் வீரர்களை கடும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் அந்த அணியின் கேப்டன் ரஹானே போட்டிக்கு பின்னர் அளித்த பேட்டியில், தோல்வி குறித்து மனமுடைந்து பேசினார்.

அவர், “எதுவும் சொல்வதற்கில்லை. எங்களது பேட்டிங் படுமோசமாக இருந்ததை அனைவரும் பார்த்தனர். மிகவும் ஏமாற்றமடைந்து இருக்கிறோம்.
இந்த தோல்விக்கு நான் பொறுப்பேற்று கொள்கிறேன். தவறான ஷாட்டை ஆடி ஆட்டமிழந்தேன். எல்பிடபிள்யூ அவுட் குறித்து நான் ஸ்ட்ரைக்கில் நின்ற ரகுவன்ஷிக்கும் உறுதியாகத் தெரியவில்லை. ஏனோ நானும் அந்த நேரத்தில் ரிவ்யூ எடுக்க விரும்பவில்லை.
ஒரு பேட்டிங் யூனிட்டாக நாங்கள் மிகவும் மோசமாக பேட் செய்தோம். நாங்கள் பொறுப்பற்றவர்களாக இருந்தோம். நாங்கள் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறோம். பந்து வீச்சாளர்கள் இந்த பிட்சில் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர், வலுவான பஞ்சாப் அணியின் பேட்டிங்கை 111 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தனர்.
இந்த நேரத்தில், என் தலையில் நிறைய விஷயங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. எளிதான சேஸிங் என்று தான் நினைத்தேன். ஆனால் அப்படி அமையவில்லை.
இதனைத் தொடர்ந்து அணி வீரர்களுடன் பேச செல்லும்போது என்னை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். சக வீரர்களுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
இப்போதைக்கு இன்னும் நேர்மறையாக இருக்க வேண்டும் பாதி இன்னும் மீதமுள்ளது. இதை சரி செய்து முன்னேற வேண்டியது அவசியம்” என்று ரஹானே பேசினார்.
கொல்கத்தா அணி தனது அடுத்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை தனது சொந்த மைதானமான ஈடன் கார்டன் மைதானத்தில் வரும் 21ஆம் தேதி எதிர்கொள்ள உள்ளது.