இன்று இந்தச் சமையல்தான் எனத் தீர்மானித்து, பாதி தயாரிப்புகளை முடித்திருக்கும்போது ஏதாவது ஒரு பொருள் இல்லை என்பது நினைவுக்கு வரும். இதனால் அந்த டிஷ்ஷை சமைக்க முடியாமல் திணறிப் போவோம். அது போன்ற நேரங்களில் சீரியலில் வருவது போல், ‘இவருக்கு பதில் இவர்’ என ஒரு பொருளுக்கு மாற்றாக இன்னொரு பொருளை வைத்து சமையலை முடித்து விடலாம். இந்த மாற்று பொருட்களை வைத்து சமையல் செய்யும்போது 80 சதவிகிதம் ஒரிஜினல் சுவையைக் கொண்டு வந்து விட முடியும்.
தக்காளி சட்னி செய்ய நினைத்து தக்காளி இல்லாமல் போனால், எண்ணெயில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி சேர்த்து வதக்கியதும் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். அதற்குப் பிறகு சிறிது புளியை அதே எண்ணெயில் சேர்த்து வதக்கி, ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும். தக்காளியே இல்லாமல் சட்னி செய்துவிடலாம்.
சாம்பார், ரசத்தில் தக்காளிக்கு பதில் புளியைப் பயன்படுத்தலாம். காரக்குழம்பு, புளிக்குழம்பில் தக்காளிக்கு பதில் புளியின் அளவை சற்று அதிகரித்தால் போதுமானது. பழைய புளி பயன்படுத்தினால் புளிப்புத் தன்மை அதிகமாக இருக்கும். புதிய புளியில் இனிப்புத்தன்மை அதிகமாக இருக்கும். என்ன சமையல் செய்கிறோமோ அதற்கு ஏற்றாற்போல் புளியைப் பயன்படுத்தலாம். பிரியாணியில் தக்காளிக்கு பதில் தயிர், எலுமிச்சைப்பழச்சாறு பயன்படுத்தலாம்.
வெங்காயம் – தக்காளி வதக்கி அரைத்து, குழம்புத்தூள் அல்லது மிளகாய்த்தூள் சேர்த்துச் செய்யும் குழம்பு, கிரேவியில் மிளகாய்த்தூளுக்கு பதில் காய்ந்த மிளகாயை மசாலாவுடன் அரைத்துப் பயன்படுத்தலாம். புளியை சற்று அதிகரித்து, தாளிக்கும்போது பச்சை மிளகாயையும், காய்ந்த மிளகாயையும் சேர்த்து தாளித்தால் சாம்பார் பொடியே இல்லாமல் சாம்பார் வைத்து விடலாம்.
பிரியாணி, புலாவ், பிரிஞ்சி போன்றவற்றில் மிளகாய்த்தூளுக்கு பதில் மிளகாயின் அளவை சற்று அதிகரிக்கலாம். சிக்கன், காளான், காலிஃபிளவர் சமையல், உருளைக்கிழங்கு வறுவல், வாழைக்காய் வறுவல் போன்றவற்றுக்கு மிளகாய்த்தூளுக்கு பதில் மிளகுத்தூளைப் பயன்படுத்தலாம்.
பனீர் தயாரிக்கும்போது பாலைத் திரிய வைப்பதற்கு எலுமிச்சைப்பழத்துக்கு பதில் வினிகர் பயன்படுத்தலாம். முந்திரி அரைத்து செய்யப்படும் நார்த் இந்தியன் குருமாக்களில் தயிர் சேர்ப்பார்கள். தயிர் இல்லாத பட்சத்தில், பாலைக் கொதிக்க வைத்து, சிறு துளி எலுமிச்சைப்பழத்தைச் சேர்த்து திரிய வைக்க வேண்டும். அதிலிருந்து பிரிந்து வரும் புளித்த தண்ணீரை தேவையான அளவு குருமாவில் சேர்க்கலாம்.
ஆப்ப மாவு நொதிக்க வைக்க சோடா உப்புக்கு பதில் இளநீர் அல்லது பனங்கள் சேர்க்கலாம். தோசை மாவு புளிக்கவில்லை என்றால் சிறிது பழைய சோற்றை மிக்ஸியில் அரைத்து மாவில் கலந்தால் சற்று நேரத்தில் மாவு புளிக்கத் தொடங்கி விடும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…