ெட்டிக்கடைகளில் 80 மற்றும் 90களில் மிகவும் பிரபலமாக இருந்த தேன் மிட்டாயை இப்போது பார்ப்பதே அரிதாகிவிட்டது. பாரம்பர்ய சுவைமிக்க நாவை சுண்டியிழுக்கும் நாட்டு திண்பண்டமான இந்த தேன் மிட்டாயை வீட்டிலேயே செய்து ருசிக்கலாம். இன்றைய தலைமுறையினரையும் மகிழ்விக்கலாம்.
**என்ன தேவை?**
பச்சரிசி – ஒரு கப்
தோல் நீக்கிய உளுந்து – கால் கப்
சர்க்கரை – ஒன்றரை கப்
தண்ணீர் – முக்கால் கப்
எலுமிச்சைச்சாறு – 4 துளிகள்
ஃபுட் கலர் ஆரஞ்சு – சிறிதளவு
பேக்கிங் சோடா – கால் டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – ஒரு சிட்டிகை
**எப்படிச் செய்வது?**
அரிசி, உளுந்து இரண்டையும் ஐந்து மணிநேரம் ஊறவைத்து நன்கு அரைத்தெடுத்து ஃபுட் கலர் ஆரஞ்சு, பேக்கிங் சோடா, உப்பு சேர்த்து நன்றாகக் கலந்துவைக்கவும். பிறகு சர்க்கரைப் பாகு தயாரிக்க ஒன்றரை கப் சர்க்கரையில் முக்கால் கப் நீர் சேர்த்து அரை கம்பி பதத்துக்குக் காய்ச்சி அடுப்பை அணைத்து விடவும். இதில் சில சொட்டுகள் மட்டும் எலுமிச்சைச்சாறு விட்டு வைக்கவும். பிறகு சூடான எண்ணெயில், அரைத்து தயாராக உள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாகக் கிள்ளி அதில் போட்டு நன்கு பொரித்து, உடனே அதை எடுத்து சர்க்கரை பாகில் முக்கி சிறிது நேரம் கழித்து எடுத்துவைத்தால் அருமையான தேன் மிட்டாய் தயார். விருப்பப்பட்டால் பாகில் ஊறிய மிட்டாய்களை எடுத்து தனியாக சர்க்கரையில் ஒரு புரட்டு புரட்டியும் கண்ணாடி டப்பாவில் எடுத்து அடுக்கிவைத்துக்கொண்டு மூன்று முதல் ஐந்து நாள்கள் வரை சாப்பிடலாம்.
**[நேற்றைய ரெசிப்பி: வெங்காய போண்டா](https://minnambalam.com/public/2022/06/16/1/onion-bonda)**