முட்டையை எப்படிச் சமைத்து சாப்பிட்டாலும் அது சுவையானதுதான். சமைக்கத் தெரியாதவர்கள்கூட முட்டையில் ஆம்லெட், ஆஃப் பாயில் என எது போட்டாலும் அது எப்படி வந்தாலும் சுவையாகத்தான் இருக்கும். முட்டையில் புரோட்டீன், செலினியம், வைட்டமின் டி, பி6, பி12 , மினரல் சத்துகள், ஸிங்க், அயர்ன், காப்பர் போன்ற பல ஊட்டச்சத்துகள் உள்ளன.
இந்த நிலையில் ‘அவிச்ச முட்டை, ஆம்லெட் இதுல எது நல்லது?’, ‘வேகவைக்காத பச்சை முட்டையைச் சாப்பிடலாமா… கூடாதா?’, ‘வேகவைக்காத, அரைவேக்காடான முட்டைகளைத் தொடர்ந்து சாப்பிட்டால், செரிமானக் கோளாறு, வயிற்றுவலி எல்லாம் வருமா’ என்கிற கேள்விகள் தொடர்ந்து கொண்டிருக்க… ‘எல்லாருக்கும் ஏற்றதா ஆஃப் பாயில்?’ என்கிற கேள்விக்கு விளக்கமளிக்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
“முட்டையை வேகவைப்பதால், அதிலுள்ள உடலுக்குத் தேவையான செலினியம், ரிபோஃபிளேவின் உள்ளிட்ட சத்துகள் குறைந்துவிடும், எனவே, அரைவேக்காடான ஆஃப் பாயில் முட்டைகள் சாப்பிடலாம் என நினைப்பது தவறு. ஆஃப் பாயிலில் முட்டை முழுமையாக வேகாததால், அதில் உள்ள பாக்டீரியாக்கள் முழுமையாக அழிக்கப்பட்டிருக்காது. இது குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோருக்கு உகந்ததல்ல.வேகவைக்கும்போது, சத்துகளின் அளவு குறைந்தாலும், நோய்ப் பாதுகாப்பு மிகவும் முக்கியம். வெரைட்டியை விரும்புபவர்கள் ஆஃப் பாயிலுக்கு பதிலாக மிளகு, வெங்காயம் சேர்க்கப்பட்ட ஆம்லெட் சாப்பிடலாம்.
இதயப் பிரச்சினைகள், உடல் பருமன் கொண்டவர்கள், சர்க்கரை நோயாளிகளாக இருந்தால் அவர்களும் ஆஃப் பாயில் முட்டையைத் தவிர்த்தல் நல்லது. மற்ற ஏதேனும் உடல் நலப் பிரச்சினைகள், தீவிரமான மருத்துவ சிகிச்சைகள், மாத்திரைகள் சாப்பிட்டு வருவோர் ஆஃப் பாயிலை தவிர்க்கலாம். உடல் எடையை கட்டுக்கோப்பாக கண்காணிப்போர் ஆஃப் பாயிலில் காய்கறிகளையும் சேர்த்து முழுமையான உணவாகவே சாப்பிடலாம்” என்று அறிவுறுத்துகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
யோசனை சொன்ன வேலுமணி… மறுத்த எடப்பாடி