வீடுகளில் செய்யப்படும் இட்லி சில நேரங்களில் பூப்போல இருக்க.. பல நேரங்களில் கல் போலவோ, வழவழப்பாகவோ இருக்கும். இதற்கு என்ன காரணம் என்பது பல இல்லத்தரசிகளின் கவலை. அதை எப்படித் தவிர்ப்பது?
நான்கு கப் (ஐஆர் 20) இட்லிப் புழுங்கல் அரிசியை இரண்டு முறை களைந்து கழுநீரை வடித்துவிட்டு, தேவையான அளவு தண்ணீர்விட்டு குறைந்தது மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். ஒரு கப் உளுத்தம்பருப்பைக் குறைந்தது இரண்டு முறை களைந்து கழுநீரை வடித்துவிட்டு, அரை டீஸ்பூன் வெந்தயம் சேர்த்துத் தேவையான அளவு தண்ணீர்விட்டு மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்.
முதலில் ஊறவைத்த தண்ணீரை வடித்துவிட்டு உளுந்து மற்றும் வெந்தயத்தை கிரைண்டரில் போட்டுக் கொஞ்சம் தண்ணீர்விட்டு விழுது போல அரைத்துக்கொள்ளவும். பிறகு, கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து நன்கு மையாகப் பொங்கிவரும் வரை அரைக்கவும். உளுந்து மாவு வெள்ளையாகப் பந்து போல் அரைப்பட்டதும் மாவை ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
ஊறவைத்த தண்ணீரை வடித்துவிட்டு அரிசியை கிரைண்டரில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர்விட்டு சற்று கொரகொரப்பான விழுதாக (ரவையைவிட சற்று மையாக) அரைக்கவும். உளுந்து மாவு வைத்திருக்கும் அதே பாத்திரத்தில் அரிசி மாவைச் சேர்க்கவும். சிறிதளவு தண்ணீர் விட்டு கிரைண்டரில் ஒட்டியிருக்கும் மாவைக் கழுவி அரைத்த மாவுடன் சேர்க்கவும். பிறகு உப்பு மற்றும் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து வலதுகையால் அடி முதல் மேல் வரை ஏழெட்டுத் தடவை மாவை நன்கு அடித்துக் கலந்துகொள்ளவும்.
தூக்கி ஊற்றினால், ஊற்றும்பதத்தில் மாவு இருப்பது சரியான பதம். வேண்டிய பாத்திரத்துக்கு மாற்றி மூடி ஆறில் இருந்து எட்டு மணி நேரம் வரை புளிக்கவைக்கவும். புளித்த பிறகு மாவு நன்றாகப் பொங்கிவிடுமாதலால் மாவு வைக்கும் பாத்திரத்தில் பாதி அளவுதான் புளிப்பதற்கு மாவை ஊற்றிவைக்கவும். மாவைப் பாத்திரத்துக்கு மாற்றிய பிறகு கிளறிவிடக் கூடாது. அப்படியே மூடிவைத்து புளிக்கவைக்க வேண்டும்.
இட்லி மாவு கெட்டியாக இருந்தால், இட்லி சற்று கனமாக வரும். இட்லி மாவுடன் உப்பு சேர்த்துக் கரைக்கும்போது கொஞ்சம் மாவைக் கையில் எடுத்துச் சற்று உயரத்தில் இருந்து விட்டால் மாவு ஒரே சீராக பாத்திரத்தில் விழ வேண்டும். விட்டு விட்டு அல்லது ரொம்பவும் வேகமாக விழக் கூடாது. மாவு இந்த பக்குவத்தில் இருந்தால் இட்லி மிகவும் மிருதுவாக வரும்.
அரிசி அரைக்கும்போது கால் கப் அவல் அல்லது அன்றைக்குச் செய்த சாதம் இருந்தால் சேர்த்து அரைக்கலாம்.
நல்ல ரக உளுந்தைப் பயன்படுத்த வேண்டும். உளுந்து பழசாகிவிட்டால், மாவு அரைக்கும்போது பொங்கி வராது. அப்படி இருந்தால் அரை கப் உளுந்து கூட சேர்க்கவும்.
வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு `ஐஆர் 20’ அல்லது இட்லிப் புழுங்கல் அரிசி கிடைக்கவில்லை என்றால், புழுங்கலரிசி பயன்படுத்தியும் செய்யலாம். அதற்கு அளவு சற்று மாறுபடும்… புழுங்கல் அரிசி – 3 கப், பச்சரிசி – ஒரு கப், உளுந்து – ஒரு கப், வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
உப்பு – 4 டீஸ்பூன்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இன்னுமாடா இந்த உலகம் உங்கள நம்புது? அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: கைதான மகா விஷ்ணு… அடுத்தது செக்ஸ் வழக்கு! ஏர்போர்ட் முதல் கோர்ட் வரை நடந்தது என்ன?