உழைக்க வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்று சதா சர்வகாலமும் ஓடித் திரிகிறோம். உழைப்பில் காட்டும் அக்கறையை, உடலுக்குக் காட்டுவதில்லை. மனம் விரும்பும்படி உழைக்க ஆரோக்கியமான உணவு உண்பதும் முக்கியம். சத்தான உணவை நன்றாக உண்ணும் பட்சத்தில் உடல்நலக் குறைவுக்கு எதிராக நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள முடியும். காலை டிஃபன், மதியம் உணவு இடைப்பட்ட நேரத்தில் ஸ்நாக்ஸ், பழங்கள், காய்கறி சாலட் இரவு பாதி வயிறு உணவு எனப் பட்டியலிட்டு உரிய நேரத்தில் ஊட்டமான உணவை உட்கொண்டால், நோய் நம்மை நெருங்காது. நீண்ட ஆயுளுடன் நிம்மதியாக வாழலாம். அந்த வகையில் தினசரி நாம் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருட்கள் இதோ…
தினமும் ஒரு கீரையைச் சேர்த்துக் கொள்வதன் மூலம், உடலுக்குத் தேவையான சத்துகளைப் பெற முடியும். நார்ச்சத்து நிறைந்து இருப்பதால், கீரை சாப்பிட்டவுடன் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். கீரையில் இரும்புச் சத்து, தாது உப்புக்கள், நார்ச்சத்துகள், கால்சியம் நிறைந்து இருப்பதால், உடல் சீராக இயங்க உதவும். எலும்புகள் உறுதிப்படும். அன்றன்றைக்குப் பறித்த கீரைகளைச் சாப்பிடுவதுதான் நல்லது!
தினமும் ஒரே மாதிரியான பழத்தை சாப்பிடாமல், மூன்று விதமான பழங்களைச் சாப்பிடுவதைக் கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள். பழம் சாப்பிட்டதும் பால் அருந்துவது சத்துகளை உடல் கிரகிக்க உதவும். பழங்களைச் சாப்பிடுவதால் முதுமையை விரட்டலாம்.
குழந்தைகளுக்கு எல்லாவிதமான காய்கறிகளையும் உண்ணப் பழக்க வேண்டும். வயதானவர்கள் நீர்ச்சத்து, நிறைய நார்ச்சத்துள்ள அவரைக்காய், புடலங்காய், பூசணி, பீன்ஸ் வாழைத்தண்டு, கேரட், வெள்ளரிக்காய் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். தினமும் இரண்டு விதமான காய்கறிகள் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பாதாம், முந்திரி, வேர்க்கடலை, பிஸ்தா, அக்ரூட் போன்ற பருப்பு வகைகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. மொத்தப் பருப்பு வகைகளையும் கலந்து அதில் தினமும் ஒன்று முதல் இரண்டு தேக்கரண்டி அளவில் சாப்பிடலாம். உடல் எடையும் கூடும். குழந்தைகளின் உடல் உறுதியாகும். சருமம் பொலிவடையும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பயறு வகைகள் தேவை. அதே சமயம் அதை அளவோடு சாப்பிடுவதே நல்லது. தினமும் 50 முதல் 75 கிராம் எடுத்துக்கொள்ளலாம்.
முளைவிட்டப் பயறு வகைகளில் நீர்ச்சத்து, வைட்டமின் சத்துகள் அதிகம் உள்ளன. ரிபோஃபிளேவின் பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள், இரும்பு சத்து, கால்சியம், பாஸ்பரம் போன்ற சத்துக்கள் அதிகம் இருப்பதால், உடலுக்கு நல்ல ஊட்டத்தைத் தரும். அப்படியே சாப்பிடாமல் வெந்நீரில் போட்டு லேசாக வேகவைத்து சாப்பிடுவது நல்லது. தினமும் 50 கிராம் அளவுக்கு முளைவிட்ட தானியத்தை எடுத்துக்கொள்ளலாம்.