சண்டே ஷாப்பிங் கிளம்பிவிட்டீர்களா… பாக்கெட்டுகளில் அடைக்கப்படாத பொருட்கள் இல்லை என்கிற நிலையில் அந்தப் பொருட்களை எந்தவொரு வாடிக்கையாளரும் வாங்க 6-10 விநாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்கிறார்கள் என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன. வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் அதன் காலாவதி தேதி மற்றும் விலையை மட்டுமே பார்க்கின்றனர். ஆனால், உணவுப் பொருள் பாக்கெட்டுகளின் பின்புறத்தில் நிறைய முக்கியமான தகவல்கள் உள்ளன. அதை அவசியம் கவனியுங்கள் என்று எச்சரிக்கிறார்கள் உணவு பாதுகாப்பு துறையினர்.
பாக்கெட் மீது உணவுப்பொருளின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். அதாவது உள்ளிருக்கும் உணவுப்பொருள் பால் என்றால், பாக்கெட்டின் மீது பால் என்ற பெயர் இருக்க வேண்டும். பிஸ்கட், சாக்லேட் என்று நாம் எந்தப் பொருளை வாங்குகிறோமோ, அந்தப் பொருளின் பெயர் அதில் இருக்க வேண்டும். அதன் மொத்த எடை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
சைவம் என்றால் பச்சை சதுரத்தின் நடுவே பச்சை நிற புள்ளி இருக்கும். அசைவ உணவு என்றால் பிரவுன் சதுரத்தின் நடுவே பிரவுன் நிற முக்கோண குறியீடு இருக்க வேண்டும். பேட்ச் நம்பர் இருக்க வேண்டும். நாம் வாங்கிய குறிப்பிட்ட அந்த உணவில் ஏதேனும் புகார் இருந்தால், அது எந்த பேட்ச்சில் தயாரிக்கப்பட்டது என்று தெரிந்து கொள்ள இது உதவும். அதிகபட்ச சில்லறை விலை. பொருட்களின் பட்டியல். உணவுச்சேர்க்கைகள் மற்றும் நிறமிகளின் பட்டியல். ஒவ்வாமை பொருட்களின் விவரங்கள் இருக்க வேண்டும்.
நாம் வாங்கும் குறிப்பிட்ட உணவில் பால், முட்டை, மீன், இறால், குளுட்டன், சோயா, வேர்க்கடலை அல்லது முந்திரி உள்ளிட்ட நட்ஸ், சல்பைட் போன்றவை சேர்க்கப்பட்டிருந்தால் அதை குறிப்பிட வேண்டும். ஏனென்றால் இவையெல்லாம் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். சல்பைட் பொதுவாக மதுபானங்களில் சேர்க்கப்பட்டிருக்கும். மற்றும் சர்க்கரையிலும் காணப்படும். இதன் அளவு 10ppm-க்கு மேல் இருந்தால், இது ஒவ்வாமை பொருளாகக் கருதப்படும்.
தயாரிப்பு தேதி… உணவுப்பொருளின் ஆயுள் ஏழு நாட்களுக்குக் கீழ் இருந்தால் அதற்கு தயாரிப்பு தேதி குறிப்பிடப்பட தேவையில்லை. காலாவதியாகும் தேதி… உணவுப்பொருளின் ஆயுள் ஏழு நாட்களுக்குக் கீழ் இருந்தால் காலாவதி தேதி மிக மிக அவசியம்.
அடுத்து, தயாரிப்பாளரின் விவரம். வாடிக்கையாளர் சேவை எண் மற்றும் மின்னஞ்சல். பயனர் வழிமுறைகள். வைப்பு முறைகள்… உதாரணமாக, பால் என்றால் இந்த வெப்பநிலையில் வைக்க வேண்டும்; ஐஸ்க்ரீம் என்றால் ஃப்ரீஸரில் வைக்க வேண்டும் என்பனவற்றை குறிப்பிட வேண்டும். மறுசுழற்சி சின்னம் மற்றும் அதன் நடுவே எந்த வகை பிளாஸ்டிக் என்று குறிக்கும் எண். தயாரித்த நாடு.
இவற்றையெல்லாம் நீங்கள் உணவு பாக்கெட்டை வாங்கச் செல்லும்போதெல்லாம், அதன் லேபிளைப் படிக்க சிறிது நேரம் ஒதுக்குங்கள். இதன் மூலம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நீங்கள் சரியான உணவுத் தேர்வை நீங்கள் செய்யலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: மூட்டை கட்டும் ஆர்.என்.ரவி… புதிய ஆளுநர் வி.கே.சிங்? ஸ்டாலின் வைத்த ட்விஸ்ட்!
தமிழ்த்தாய் வாழ்த்து… ஆளுநருக்கு எதிராக திமுக சட்டத்துறை கூட்டத்தில் தீர்மானம்!