வழக்கமாக அரிசியில்தான் நாம் மோர்க்களி செய்து சுவைத்திருப்போம். கேழ்வரகிலும் மோர்க்களி செய்து அசத்தலாம். இந்த ராகி மோர்க்களி, பசி உணர்வைக் குறைத்து, உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவும். அனைவருக்கும் ஏற்றதாக அமையும்.
என்ன தேவை?
ராகி மாவு (கேழ்வரகு மாவு) – ஒரு கப்
புளித்த மோர் – ஒரு கப்
மோர் மிளகாய் – 3 (துண்டுகளாக்கவும்)
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
ராகி மாவுடன் மோர், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கரைக்கவும். அடிகனமான கடாயில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். அதனுடன் மோர் மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
பிறகு மாவுக் கரைசலைச் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கிளறி வேகவிட்டு இறக்கவும் (ஈரமான விரல்களால் தொட்டுப்பார்க்கும்போது, ஒட்டாமல் இருந்தால், வெந்துவிட்டது என்று தெரிந்துகொள்ளலாம்). மேலே கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மாணவியரிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தும் எடப்பாடி – ரகுபதி காட்டம்!