பாரம்பர்ய உணவுகளில் விருந்தே வைக்கலாம் என்பதற்கு உதாரணம் இந்த பச்சைப்பயறு பாயசம். உடலுக்கு நல்ல பலத்தையும் தேகத்துக்கு நல்ல மினுமினுப்பையும் தரும் இந்த பாயசத்தை மெலிந்தவர்கள் வாரம் இருமுறை சாப்பிட, உடல் பூசினாற்போல பருமன் அடைவார்கள். வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது.
என்ன தேவை?
பச்சைப்பயறு – 100 கிராம்
வெல்லம் – 200 கிராம்
தேங்காய்ப்பால் – ஒரு கப்
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
முந்திரி, உலர்ந்த திராட்சை தலா – 25 கிராம்
பொடியாக நறுக்கிய தேங்காய்ப்பல் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை, ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
ஒரு குக்கரில் நெய்விட்டு முந்திரி, உலர்ந்த திராட்சை, தேங்காய்ப்பல், ஏலக்காய்த்தூள் போன்றவற்றை வறுத்து தனியே எடுத்துவைக்கவும். பிறகு, அதிலேயே பச்சைப்பயறு சேர்த்து வதக்கி பிறகு தேவையான அளவு தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து மூன்று விசில்விட்டு இறக்கவும்.
பிறகு வெல்லத்தைக் கொதிக்க வைத்து, அதில் ஊற்றிக் கிளறி, நன்கு கலக்கி, இதில் வறுத்த எடுத்தவற்றை கலந்து நன்கு கிளறி, ஐந்து நிமிடங்கள் கழித்து திக்கான தேங்காய்ப்பால்விட்டு இறக்கினால், மண்மணக்கும் பச்சைப்பயறு பாயசம் தயார். தேங்காய்ப்பால் விட்டதும் அடுப்பை அணைத்துவிடவும். கொதிக்க விடக் கூடாது.