சிறிய கற்பனையும், திட்டமிடலும் இருந்தால் போதும், காளானை வைத்து பல வகையான உணவுகளை செய்யலாம். காளான்களை மற்ற காய்கறிகளுடனும் சேர்த்து சமைப்பது போல் பாஸ்தா சேர்த்து இந்த காளான் பாஸ்தாவைத் தயாரிக்கலாம். நல்ல சுவையும், மணமும் கொண்ட இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
என்ன தேவை?
காளான் – 200 கிராம்
பாஸ்தா – 100 கிராம்
ஆலிவ் ஆயில் – 2 டேபிள்ஸ்பூன் + ஒரு டீஸ்பூன்
வெதுவெதுப்பான பால் – ஒரு கப்
நறுக்கிய குடமிளகாய் – ஒரு கப்
நறுக்கிய தக்காளி – ஒரு கப்
நறுக்கிய வெங்காயத்தாள் – ஒரு கப்
துருவிய சீஸ் – ஒரு கப்
உப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
சில்லி ஃப்ளேக்ஸ் – அரை டேபிள்ஸ்பூன்
ஒரிகானோ – ஒரு டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
பாஸ்தாவுடன் 2 கப் தண்ணீர், ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில், அரை டேபிள்ஸ்பூன் உப்பு சேர்த்து, தண்ணீர் வற்றும்வரை வேகவைக்கவும். ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயில் ஊற்றி நறுக்கிய காளான், குடமிளகாய், வெங்காயத்தாள், தக்காளி சேர்த்து, சில்லி ஃப்ளேக்ஸ், ஒரிகானோ, மிளகுத்தூள், அரை டேபிள்ஸ்பூன் உப்பு சேர்த்து சற்றே கிரிஸ்பியாக இருக்கும் வரை வதக்கவும். இறக்கும்போது வெதுவெதுப்பான பால் கலந்து நாம் வேகவைத்து எடுத்துவைத்திருக்கும் பாஸ்தாவையும் சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக கலந்து இறக்கவும்.
பேக்கிங் பானில் (baking pan) அடிப்பரப்பில் வெண்ணெய் தடவி அதன் மேல் பாஸ்தா கலவையை ஊற்றவும். அதன் மேல் துருவிய சீஸைப் பரப்பவும். இதை அவனில் (oven) 20 நிமிடங்கள் 200 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தில் வைத்து எடுக்கவும்.