கேழ்வரகில் கால்சியம் சக்தி அதிகம் உள்ளதால் வாரம் ஒருமுறை அல்லது இருமுறை கேழ்வரகு உணவுகளை சாப்பிட்டு வருவது, பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகரிக்கும். மேலும் எடைக்குறைப்புக்கும் உதவும். அப்படிப்பட்ட கேழ்வரகில் சப்பாத்தி செய்து சுவைக்க இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
ராகி (கேழ்வரகு) மாவு – ஒரு கப்
கோதுமை மாவு – ஒரு கப்
உப்பு – அரை டீஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
சூடான பால் – அரை கப்
தண்ணீர் – தேவைக்கேற்ப
எப்படிச் செய்வது?
ராகி மாவு, கோதுமை மாவு மற்றும் உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சலித்துக் கொள்ளவும். மாவுக் கலவையில் எண்ணெய் மற்றும் சூடான பால் சேர்த்து கைகளால் நன்றாகப் பிசைந்துகொள்ளவும்.
தேவையான தண்ணீரைச் சிறிது சிறிதாக மாவில் சேர்த்து மென்மையான மாவாகப் பிசையவும். 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். பின்னர் மாவைச் சிறிய பந்துகளாக உருட்டி, தட்டையாகத் தேய்த்துக்கொள்ளவும்.
ஒரு கடாயைச் சூடாக்கி, சிறிது எண்ணெயைத் தடவி, சப்பாத்தியை நடுத்தர தீயில் சுட்டெடுக்கவும். ஆரோக்கியமான ராகி – கோதுமை மாவு சப்பாத்தி தயார். உங்களுக்கு விருப்ப மான சட்னி, குருமா அல்லது கறியுடன் சூடாகப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…