கிச்சன் கீர்த்தனா: கஸூரி மேத்தி பிந்தி சப்ஜி!

Published On:

| By admin

ுறைந்த கலோரி கொண்ட உணவுகள், உங்களுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்குவதோடு உங்களுக்கு நல்ல ஆற்றலையும் தர உதவுகின்றன. அந்த வகையில் இந்த குறைந்த கலோரி கொண்ட கஸூரி மேத்தி பிந்தி சப்ஜி நோய்களை எதிர்க்கும் பண்புகளைக் கொண்டவை. மேலும் நாம் இப்போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டிய தருணத்தில் இருப்பதால் வீட்டிலுள்ள அனைவருக்கும் ஏற்றதாக அமையும்.
**என்ன தேவை?**
வெண்டைக்காய் – 20
பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பூண்டு பற்கள் – ஐந்து (தட்டியது)
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்
கஸூரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) – இரண்டு டேபிள்ஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – இரண்டு
எண்ணெய் – நான்கு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
வெண்டைக்காயை நன்கு கழுவி, ஒரு துணியில் 20 நிமிடங்கள் பரப்பி உலரவைக்கவும். பின் கால் அங்குலம் கொண்ட துண்டுகளாக நறுக்கவும். ஒரு வாணலியில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய்விட்டு சூடானதும் அதில் நறுக்கிய வெண்டைக்காயைச் சேர்த்து வதக்கவும். வெண்டைக்காய் வதங்க ஆரம்பித்ததும், சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். மூடிவைத்துக் குறைந்த சூட்டில் வதக்கவும். வெண்டைக்காய் நன்கு வதங்கியதும் ஒரு தட்டில் மாற்றிக்கொள்ளவும். அதே வாணலியில் மேலும் இரண்டு டீஸ்பூன் எண்ணெய்விட்டு சூடானதும் சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தட்டிய பூண்டு பற்கள் சேர்த்து வதக்கவும். பின்பு தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியதும் அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கலந்து சிறிது தண்ணீர் தெளித்து கலவை கெட்டியானதும் வதக்கிய வெண்டைக்காய் மற்றும் கஸூரி மேத்தி சேர்த்து கலந்து வதக்கவும். கடைசியாக கரம் மசாலாத்தூள் தூவி நன்கு புரட்டி இறக்கவும்.

**[நேற்றைய ரெசிப்பி: முள்ளங்கி முளைப்பயறு சப்ஜி](https://minnambalam.com/public/2022/06/20/1/raddish-sabji)**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share