‘உடல் எடையைக் குறைக்க வேண்டும்’ என சிலர் காலை வேளை உணவுகளைச் சாப்பிடாமல் தவிர்க்கிறார்கள். ஆனால், காலை உணவைத் தவிர்க்கவே கூடாது என்கிறார்கள் பலர்… எது சரி?
இரவு உணவுக்கும் காலை உணவுக்கும் குறைந்தபட்சம் 7-12 மணி நேரம் இடைவேளை இருக்கிறது. இரவு சாப்பிட்ட உணவு சராசரியாக மூன்று நான்கு மணி நேரத்தில் செரிமானமாகிவிடும். அதன் பின்னர், கல்லீரலில் இருந்து பித்த நீர் சுரக்க ஆரம்பித்து பித்தப்பைக்கு வரும்.
காலை உணவை எவ்வளவு தாமதமாகச் சாப்பிடுகிறோமோ, அந்த அளவுக்குப் பித்தநீரும் அதிகம் சுரந்து பித்தப்பையில் தங்கும். தொடர்ந்து நேரத்துக்குச் சாப்பிடாதபோது, பித்தப்பையில் இருக்கும் பித்தநீர் அளவு அதிகமாவதால், பித்தப்பையில் கட்டிகள் உருவாகும் வாய்ப்பு இருக்கிறது.
பொதுவாக, இரைப்பையில் தொடர்ந்து அமிலம் சுரந்துகொண்டே இருக்கும். சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகும் வரை இரைப்பையில் அமில அளவு அதிகமாக இருக்காது.
ஆனால், காலை வேளையில் தொடர்ந்து உணவைத் தவிர்க்கும்போது அல்லது தள்ளிப்போடும்போது இரைப்பையில் அமிலத்தின் அளவு அதிகரித்துக்கொண்டே இருக்கும்.
நாளடைவில், இரைப்பையின் சுவர்களை மெள்ள மெள்ள இந்த அமிலம் அரிக்க ஆரம்பிக்கும். இது, ஒரு கட்டத்தில் அசிடிட்டியாகவும் அல்சராகவும் மாறும் வாய்ப்பு இருக்கிறது. காலை உணவைத் தவிர்க்கும்போது, செரிமானக் கோளாறுகளும் உருவாகும்.
காலை உணவைத் தவிர்ப்பதும், தாமதமாகச் சாப்பிடுவதும் மிகவும் தவறு.
பல்வேறு விதமான நோய்கள் வருவதற்கு முறையற்ற உணவுப் பழக்கமே காரணம். பொதுவாக, காலையில் எழுந்ததும் அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் உணவைச் சாப்பிடுவதே சிறந்தது.
மோர், இளநீர் போன்ற பானங்களை அருந்துவது காலை உணவுக்கு ஈடாகாது. எனவே, கலோரி நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
புரதச்சத்து, கொழுப்புச்சத்து, மாவுச்சத்து நிறைந்த உணவுகளைக் காலையில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
உதாரணமாக, இட்லி சாப்பிடுகிறீர்கள் எனில், அதில் மாவுச்சத்து நிறைந்துள்ளது. அதற்குத் தேங்காய் சட்னி, புதினா சட்னி, தக்காளி சட்னி, சாம்பார் என ஏதாவது ஒன்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
சப்பாத்தி எனில் சென்னா மசாலா எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான், சரிவிகிதமாக ஊட்டச்சத்துகள் கிடைக்கும்.
காலையில் காய்கறிகள் எப்போதுமே அதிக அளவு சாப்பிட வேண்டும். காய்கறிகள், பழங்கள், பயறு, சாலட் வகைகளையும் சாப்பிடலாம்.
‘உடல் எடையைக் குறைக்க வேண்டும்’ எனப் பலர் காலை வேளையில் உணவுகளைச் சாப்பிடாமல் தவிர்க்கிறார்கள், இது தவறு.
காலை உணவைத் தவிர்க்கும்போது வழக்கத்துக்கு மாறாக மதிய உணவை நம்மையும் அறியாமல் அதிகமாகச் சாப்பிடுவோம்.
இது மட்டும் இன்றி, காலை உணவைத் தவிர்ப்பதால், நமது வளர்சிதை மாற்றமும் சீராக இயங்காது. இதனால், உடல் எடை கூடுமே தவிர, குறையாது” என்று எச்சரிக்கிறார்கள் ஊட்டச்சத்து ஆலோசகர்கள்.
டிஜிட்டல் திண்ணை: எம்.பி. தேர்தலுக்குள் துணை முதல்வர் ஆகிறார் உதயநிதி










