சுண்டல், பொரி கடலை, அவல், சோளக்கருது, பொரி உருண்டை, வேர்க்கடலை, எள் உருண்டை, பயத்தம் உருண்டை, ரவா லட்டு போன்ற உணவுகளைத்தான் நொறுக்குத்தீனியாகச் சாப்பிட்டு வந்தனர் நம் முன்னோர்கள். ஆனால், இன்று பண்டிகை நாட்களில் மட்டுமே கடமைக்குச் செய்து சாப்பிடுகிறோம். இந்த நிலையைத் தவிர்த்து அவ்வப்போது பாரம்பரிய உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. அதற்கு இந்த அவல் கிரிஸ்பி உதவும்.
என்ன தேவை?
ரவை மாதிரி பொடித்த அவல் – 5 டீஸ்பூன்
கொரகொரப்பாக உடைத்த வேர்க்கடலை – கால் கப்
உருளைக்கிழங்கு – 2 (வேகவைத்து, தோலுரிக்கவும்)
உப்பு, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், சாட் மசாலாத்தூள் – தலா அரை டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – ஒரு சிட்டிகை
சாட் மசாலாத்தூள் (அலங்கரிக்க) – சிறிதளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் வேகவைத்த உருளைக்கிழங்கைப் போட்டு நன்கு மசிக்கவும். இதனுடன் பொடித்த அவல், மசாலாத் தூள்கள், உப்பு, பொடித்த வேர்க்கடலை சேர்த்து நன்கு பிசையவும் (தண்ணீர் சேர்க்க வேண்டாம்). கையில் எண்ணெயைத் தடவிக்கொண்டு, எலுமிச்சை அளவு கலவையை எடுத்து உருட்டி விருப்பமான வடிவத்தில் செய்யவும். சூடான எண்ணெயில், மிதமான தீயில் பொன்னிறமாகப் பொரித்து, எண்ணெயை வடிக்கவும். மேலே சாட் மசாலா தூவி, சாஸ் அல்லது கொத்தமல்லி சட்னியுடன் பரிமாறவும்.
