கிச்சன் கீர்த்தனா : ஐந்து வத்தல் குழம்பு

Published On:

| By christopher

kitchen keerthana five chilly kuzhambu

வெயில் காலம் ஆரம்பமாகிவிட்டது. கொஞ்ச நேரம் நாம் வெயிலில் நின்றிருந்தால்… நாமே வடகம், வத்தல் போல காய்ந்துவிடும் அளவுக்கு வெயிலின் தாக்குதல் தீவிரமாகி வருகிறது . இதைப் பயன்படுத்திக்கொண்டு சுண்டைக்காய், கொத்தவரங்காய், கத்திரிக்காய் என்று வத்தல்களைப் போட்டு, காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொண்டால், இந்த ஐந்து வத்தல் சூப்பர் குழம்பை அடிக்கடி செய்து ருசிக்கலாம். kitchen keerthana five chilly kuzhambu

என்ன தேவை?
சுண்டைக்காய் வத்தல் – 8
கொத்தவரங்காய் வத்தல் – 4
வெங்காய வத்தல் – 4
கத்திரிக்காய் வத்தல் – 4
மணத்தக்காளி வத்தல் – 10
கடுகு – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பிலை – 2 ஆர்க்கு
வெந்தயம் – அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – சிறிதளவு
புளி – எலுமிச்சை அளவு
சாம்பார் வெங்காயம், பூண்டு – தலா ஒரு கைப்பிடி அளவு
நல்லெண்ணெய் – ஒரு குழிக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

வத்தல் குழம்புப் பொடி செய்ய…
தனியா, கடலைப் பருப்பு – தலா ஒரு கைப்பிடி அளவு
காய்ந்த மிளகாய் – 4
வெந்தயம் – அரை டீஸ்பூன்
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்

எப்படிச் செய்வது?
முதலில் பொடியைத் தயாரிக்க வேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் தனியா, காய்ந்த மிளகாய், வெந்தயம், கடலைப்பருப்பு, கறிவேப் பிலை, மிளகு, சீரகம் ஆகியவற்றை எண்ணெய் விடாமல், கருக்காமல் வதக்கி எடுக்கவும். இது ஆறியதும், மிக்ஸி யில் நைஸாக பொடித்துக்கொள்ளவும். இதுதான் வத்தல் குழம்புப் பொடி.

வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, வெந்தயம் தாளித்து… எல்லா வத்தல்களையும் சேர்த்து தீயாமல் வதக்குங்கள். உரித்த சாம்பார் வெங்காயத்தை நறுக்காமல் அப்படியே சேர்த்து வதக்குங்கள். பிறகு பூண்டு, சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்குங்கள். எலுமிச்சை அளவு புளியை இரண்டு கிளாஸ் தண்ணீர்விட்டு நன்கு கரைத்து வதங்கிக்கொண்டிருக்கும் வெங்காய கலவை யில் சேருங்கள். இது நன்கு கொதிக்கும்போது உப்பு, குழம்புப் பொடி சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். இந்தக் குழம்பு நன்கு கொதித்து பேஸ்ட் போல வரும்போது இறக்கிவிடுங்கள்.

சூடான சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றி, இந்த பேஸ்ட் குழம்பைச் சேர்த்து சாப்பிட்டால்… அதன் ருசியே அலாதி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share