நட்சத்திர ஹோட்டல்கள் முதல் உள்ளூர் ஹோட்டல்கள் வரை சாட் உணவுகளுக்கென்றே தனி பகுதியைத் தொடங்கிவிட்டார்கள். அதற்கென்று நம் வீட்டிலும் ரசிகர் பட்டாளம் உண்டு என்கிற நிலையில், சூப்பரான ஆலூ சாட் செய்து சுவைக்க இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
உருளைக்கிழங்கு மசாலாவுக்கு…
பாதி வேகவைத்த உருளைக்கிழங்கு – 500 கிராம் (தோலை நீக்கி சதுர வடிவில் நறுக்கவும்)
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப
மிளகாய்த்தூள் – அரை டேபிள்ஸ்பூன்
உலர்ந்த மாங்காய்ப்பொடி – ஒரு டேபிள்ஸ்பூன்
வறுத்த சீரகத்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
தனியாத்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
கடலை மாவு – 2 டேபிள்ஸ்பூன்
சாட் செய்ய…
கெட்டி தயிர் – அரை கப் (அடித்து வைக்கவும்)
பூண்டுச் சட்னி – 2 டீஸ்பூன்
இனிப்புச் சட்னி – 2 டீஸ்பூன்
பச்சைச் சட்னி – 4 டீஸ்பூன்
சாட் மசாலா – அரை டேபிள்ஸ்பூன்
வறுத்து அரைத்த சீரகத்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டேபிள்ஸ்பூன்
ஓமப்பொடி (சேவ்) – அரை கப்
நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு
எப்படிச் செய்வது?
உருளைக்கிழங்கைத் தவிர உருளைக்கிழங்கு மசாலா செய்வதற்குக் கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருள்களுடன் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றிக்கலந்து கொள்ளவும். பிறகு இக்கலவையில் உருளைக்கிழங்கையும் சேர்த்துக் கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெயைச் சூடாக்கி அதில் ஊறவைத்து இருக்கும் கலவையைச் சேர்த்து நான்கைந்து நிமிடங்கள் வதக்கி எடுத்துக்கொள்ளவும்.
ஒரு தட்டில் சிறிது உருளைக்கிழங்கு கலவையை வைத்து அதன் மேல் சிறிது தயிர், பூண்டுச் சட்னி, இனிப்புச் சட்னி, பச்சைச் சட்னி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக ஊற்றவும். பிறகு அதன் மீது சாட் மசாலா, வறுத்த சீரகத்தூள், மிளகாய்த்தூள், ஓமப்பொடி (சேவ்), கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: பாஜகவோடு கூட்டணியா? கள ஆய்வுக் கூட்டத்தில் எடப்பாடி சொன்ன டு இன் ஒன் பதில்!