கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – காளான் சமைக்கப் போறீங்களா… இதை கவனத்தில் கொள்ளுங்கள்!

Published On:

| By christopher

காளான் சமைக்கப் போறீங்களா

காளான்களில் பல வகைகள் உள்ளன. பொதுவாக நமக்கு கடை களில் விற்பனைக்குக் கிடைப்பவை பட்டன் காளான்கள்தான். சிப்பிக் காளான்களும் கிடைக்கின்றன. இவை பெரும்பாலும் சாகுபடி செய்யப் பட்டு கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. காடுகளில், தோட்டங்களில் தானாக முளைக்கும் காளான்களும் உண்டு. அனைத்து காளான்களுமே உண்ணத்தகுந்தவை அல்ல. விஷத்தன்மையுள்ள காளான்களும் உண்டு. அதைச் சாப்பிடுவதால் உயிருக்கே ஆபத்தாகும் நிலைகூட ஏற்படலாம்.

சாப்பிடுவதற்கு உகந்த காளான்களை பிரித்தறியத் தெரியாதவர்கள், கடைகளில் விற்பனை செய்யப்படுவதை மட்டுமே வாங்கிச் சாப்பிடுவது நல்லது. பேக் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள காளான்களின் காலாவதி தேதியைப் பார்த்து வாங்க வேண்டும். மங்கலான நிறம், சற்று கறுத்தது போல இருந்தால் அது பழைய காளான். அதை வாங்குவதைத் தவிர்த்துவிட வேண்டும். கடையிலிருந்து வாங்கி வந்த பிறகும் நீண்ட நாள் ஃப்ரிட்ஜில் வைக்காமல், உடனுக்குடன் சமைத்துவிடுவது நல்லது.

பட்டன் காளானின் காம்பை நீக்கிவிட்டு அதில் மைதா மாவை லேசாக தூவி (Dusting), புரட்ட வேண்டும். அதன் பிறகு ஓடும் தண்ணீரில் காளானைக் கழுவும்போது அதில் ஒட்டியிருக்கும் தூசு, அழுக்கு நீங்கிவிடும். சிப்பிக் காளானை ஓடும் தண்ணீரில் அலசி எடுத்து சமைக்கலாம். சிலர் காளானை தண்ணீரில் கழுவாமல் டிஷ்யூ பேப்பர் வைத்து துடைத்து சுத்தப்படுத்திவிட்டு, நேரடியாக சமையலுக்குப் பயன்படுத்துகின்றனர். இப்படிச் செய்வதால் அதிலிருக்கும் தூசு, அழுக்கு முழுமையாக நீங்காது.

கழுவி சுத்தப்படுத்திய காளானை உடனே சமையலுக்குப் பயன்படுத்திவிட வேண்டும். நீண்ட நேரம் வெளியில் வைத்திருந்தால் அதன் நிறம் மாறத் தொடங்கும். கழுவிய பிறகு ஃபிரிட்ஜில் வைக்கவும் கூடாது. நட்சத்திர ஹோட்டல்களில் பட்டன் காளானை சமைக்கும்போது அதன் காம்பை நீக்கிவிடுவார்கள். சில ஹோட்டல்களில் காளானின் அளவை அதிகமாக்குவதற்காக காம்புடன் சேர்த்தே சமைப்பார்கள். காம்பை நீக்குவதும், நீக்காமல் சமைப்பதும் அவரவர் விருப்பம்தான்.

காளான் மென்மையானது என்பதால் நீண்ட நேரம் அதை சமைக்கக்கூடாது. காளானை அதிகபட்சம் ஏழெட்டு நிமிடங்கள் வேக வைத்தால் போதுமானது. சமைக்கும்போது காளான் சுருங்கி, சுருண்டு போய் விட்டால் அதிகமாக வெந்துவிட்டது என்று அர்த்தம். அரைகுறையாக வெந்த காளானை சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, சரியான நேரம், முறையில் அதை சமைக்க வேண்டும்.

புலாவ், பிரியாணி, ஸ்டஃப்டு சப்பாத்தி, சூப், கிரேவி, குருமா, செமி கிரேவி, ஃப்ரை, என அனைத்து சமையலுக்கும் உகந்தது காளான். காய்கறிகள், குடை மிளகாய், வெங்காயம், தக்காளி, பனீர், சிக்கன், மட்டன், இறால் உள்ளிட்டவற்றுடன் சேர்த்தும் சமைக்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நீட் பிஜி நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு: மாணவர்கள் ஷாக்!

டிஜிட்டல் திண்ணை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்… ஐ.பி.எஸ். Vs ஐ.ஏ.எஸ்.- என்ன செய்யப் போகிறார் ஸ்டாலின்?

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share