நாடாளுமன்றமே வக்ஃப் சொத்தாகியிருக்கும்… கிரண் ரிஜிஜு பேச்சால் கொந்தளித்த எதிர்க்கட்சிகள்!

Published On:

| By Selvam

“வக்ஃப் சட்டத்தை அறிமுகப்படுத்தவில்லை என்றால், நாம் அமர்ந்திருக்கும் நாடாளுமன்றக் கட்டிடம் கூட வக்ஃப் சொத்தாக மாற்றப்பட்டிருக்கும்” என்று மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று (ஏப்ரல் 2) மக்களவையில் தெரிவித்தார். kiren rijiju says parliament

வக்ஃப் வாரிய சொத்துக்களை முறைப்படுத்துதல் மற்றும் நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களை தீர்ப்பதற்காக, வக்ஃப் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு புதிய சட்டத்திருத்த மசோதா கடந்த 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது.

ADVERTISEMENT

புதிய சட்டத்திருத்த மசோதாவின்படி, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வக்ஃப் சொத்துக்கள் மீதான வருவாய் விவரங்களை தெரிவிக்க வேண்டும், மாநில மற்றும் மத்திய வக்ஃப் வாரியங்களில் இஸ்லாமியர்கள் அல்லாத இரண்டு உறுப்பினர்கள் மற்றும் பெண்கள் சேர்க்கப்படுவார்கள். தணிக்கை அதிகாரம் மாநில அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு மாற்றம் செய்யப்படும் என்பன உள்ளிட்ட 44 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. அதில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறிய எந்த கருத்தையும் ஏற்றுக்கொள்ளாமல், நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, மக்களவையில் இந்த மசோதாவை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ இன்று தாக்கல் செய்தார்.

ADVERTISEMENT

அப்போது கிரண் ரிஜிஜு பேசும்போது,

“இந்திய ஜனநாயக வரலாற்றில் ஒரு நாடாளுமன்றக் கூட்டுக் குழுவால் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய ஆலோசனை செயல்முறையாக ஜேபிசியின் செயல்பாடு அமைந்தது.

ADVERTISEMENT

97.27 லட்சத்திற்கும் அதிகமான மனுக்கள், குறிப்பாணைகள் ஜேபிசிக்கு நேரடி மற்றும் ஆன்லைன் மூலமாக வந்தது. ஜேபிசி அதன் அறிக்கையை இறுதி செய்வதற்கு முன்பு அவை ஒவ்வொன்றையும் ஆய்வு செய்தது. 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 284 வக்ஃப் வாரிய பிரதிநிதிகளிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதுதவிர, சட்ட வல்லுநர்கள், தொண்டு நிறுவனங்கள், கல்வியாளர்கள் மற்றும் மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் கருத்துக்களைச் சமர்ப்பித்துள்ளனர். அரசாங்கம் எந்த மதத்திலும் தலையிடப் போவதில்லை.

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா தொடர்பாக எதிர்க்கட்சிகள் மக்களை தவறாக வழிநடத்துகிறார்கள். இந்த மசோதா முஸ்லிம் சொத்துக்களுடன் மட்டுமே தொடர்புடையது, மதத்துடன் அல்ல.

2013 ஆம் ஆண்டில், சீக்கியர்கள், இந்துக்கள், பார்சிகள் மற்றும் பிற மதத்தினர் வக்ஃபு உருவாக்க அனுமதிக்கும் வகையில் காங்கிரஸ் சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. வக்ஃப் என்பது முஸ்லிம்களுக்கானது என்பது அனைவருக்குமே தெரியும்.

1970-ஆம் ஆண்டு முதல் டெல்லியில் நடந்து வரும் ஒரு வழக்கில், டெல்லி வக்ஃப் வாரியம் நாடாளுமன்ற கட்டிடம், ஏர்போர்ட் உட்பட பல சொத்துக்கள் வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமானது என்று உரிமை கோரியது. வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. ஆனால் அந்த நேரத்தில், யுபிஏ அரசாங்கம் 123 சொத்துக்களை வக்ஃப் வாரியத்திடம் ஒப்படைத்தது.

இன்று இந்தத் திருத்தத்தை நாம் அறிமுகப்படுத்தவில்லை என்றால், நாம் அமர்ந்திருக்கும் நாடாளுமன்றக் கட்டிடம் கூட வக்ஃப் சொத்தாக மாற்றப்பட்டிருக்கும். நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வராவிட்டால், பல சொத்துக்கள் வக்ஃப் வாரியத்திற்கு மாற்றப்பட்டிருக்கும்.

வக்ஃப் சொத்துக்கள் என்பது தனியார் சொத்துக்கள். அவற்றை ரயில்வே மற்றும் ஆயுதப்படைகளின் நிலங்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது” என்று பேசினார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும்போது, “ஜேபிசி நடத்திய நீண்ட ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இது ஒரு ஜனநாயகக் குழு. இந்தக் குழு காங்கிரஸ் அமைத்த குழுவைப் போல செயல்படவில்லை. இது முறையான நடைமுறை மற்றும் ஆலோசனைகளைப் பின்பற்றியது” என்று தெரிவித்தார்.

இந்த சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, ஆம் ஆத்மி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பியதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. kiren rijiju says parliament

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share