இரண்டாம் எலிசபெத் மறைவை அடுத்து இங்கிலாந்து மன்னராக கடந்த 2023-ஆம் ஆண்டு மே 6-ஆம் தேதி மூன்றாம் சார்லஸ் முடிசூட்டப்பட்டார். இந்தநிலையில், மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய் இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீபத்தில் மன்னர் சார்லஸ் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இன்று முதல் அவர் புற்றுநோய்க்கான மருத்துவ சிகிச்சையை எடுத்துக்கொள்கிறார்.
மக்கள் சந்திப்பை தவிர்க்குமாறு, மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தொடர்ந்து அவர் நாட்டின் அரசாங்க நடவடிக்கையில் வழக்கம் போல் ஈடுபடுவார்.
மருத்துவ சிகிச்சை அளித்து வரும் குழுவினருக்கு மன்னர் சார்லஸ் வாழ்த்து தெரிவித்தார். மன்னர் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறார். விரைவில் பொதுப்பணிக்கு திரும்புவேன் என்று நேர்மறையான நம்பிக்கையில் உள்ளார். ஊகங்களைத் தடுக்கவும், உலகில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமையும் என்பதால் இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது ” என்று பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
மன்னர் மூன்றாம் சார்லஸ் விரைவில் நலம்பெற இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரிஷி சுனக் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மன்னர் சார்லஸ் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறேன். அவர் முழு பலத்துடன் மீண்டும் மக்கள் பணியாற்றுவார் என்பதில் எந்த சந்தேமும் இல்லை. இங்கிலாந்து மக்கள் அனைவரும் மன்னர் பூரண நலம்பெற வாழ்த்துகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…