சொத்துப் பத்திரம் கேட்டு மிரட்டிய கும்பலை சென்னை நீலாங்கரை போலீசார் கைது செய்து சிதம்பரம் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஐ.டி.நிறுவனத்தில் வேலை செய்த சிதம்பரத்தைச் சேர்ந்த ஹாஜா மொய்தீன் என்பவர், தற்போது வேலையை விட்டுவிட்டு குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார். இவருக்கு சென்னை நீலாங்கரை, சிதம்பரம், தஞ்சாவூர் பகுதிகளில் சொந்தமாக வீடு மற்றும் மனைகள் உள்ளன.
சமீபத்தில் அவர், மும்பையிலிருந்து தஞ்சாவூரில் இருக்கும் தங்கை வீட்டுக்கு வந்தார். அப்போது, சிதம்பரத்தில் இருக்கும் இடத்தை விற்க முன்வந்துள்ளார். அந்த இடத்தை ஹாஜா, 2017ம் ஆண்டு ஜமால் என்பவரிடமிருந்து பெற்றுள்ளார்.
இந்த நிலையில் ஜமால், ’விற்ற சொத்தை என்னிடமே கொடுத்துவிடு. அதற்கான உரிய விலையைத் தந்துவிடுகிறேன்’ என ஹாஜாவிடம் சொல்ல, அவர் மறுத்திருக்கிறார். இதைத் தொடர்ந்து அவர் கடத்தப்பட்டார்.
இந்த விவகாரத்தில் நடந்தது என்ன? கடத்தப்பட்டவரும், கடத்தியவரும் போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலம் என்ன என்று விசாரித்தோம். “2017இல் ஜமால் என்பவர் அவருக்குச் சொந்தமான வீட்டை என்னிடம் 1 கோடி 60 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ததுடன், அதற்கான பத்திரத்தையும் கொடுத்தார்.

இந்த நிலையில், அந்த இடத்தை மீண்டும் ஜமால் கேட்டு என்னை மிரட்டிவந்தார். கடந்த நவம்பர் 5ஆம் தேதி, நான் சிதம்பரம் வந்தபோது ஜமால் என்பவர், விசிக பிரமுகர் செல்லப்பா தலைமையில் அடியாட்களை வைத்து என்னை கடத்தினார். சிதம்பரத்தில் உள்ள ஒரு லாட்ஜில் இரண்டு நாட்களாக என்னைப் பூட்டி வைத்து மிரட்டி டாக்குமென்ட்டைக் கேட்டனர்.
அப்போது என்னுடைய செல்போனையும் பிடுங்கிக்கொண்டனர். உயிர் தப்பித்தால் போதும் என்ற நிலைக்கு வந்த நான், நீலாங்கரை தமிழ்நாடு மெர்கன்டல் வங்கியில் பத்திரம் இருப்பதாக சொல்லி அவர்களை அங்கு அழைத்து வந்தேன். இசிஆர் சாலையில் வரும்போது ஒரு இடத்தில் நிறுத்தி அவர்கள் டீ சாப்பிட்டார்கள். அப்போது, நான் சிறுநீர் கழிப்பது போல் ஓடி அங்கிருந்தவரிடம் செல்போன் வாங்கி என் மனைவிக்கும் சகோதரருக்கும் விசயத்தைச் சொன்னேன்.
இதைத் தொடர்ந்து என் சகோதரர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி, நேற்று நவம்பர் 8ஆம் தேதி மதியம் நீலாங்கரை போலீஸார் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, நான் வந்த கார் ஆன, PY 01 VB 8374 என்ற நம்பர் பிளேட் பொருத்தப்பட்ட baleno காரை மறித்தனர். அதில் நானும் என்னை கடத்தியவர்களும் இருந்தனர்.
அவர்கள் அனைவரையும் எஸ்.ஐ சிவக்குமார், தலைமை காவலர் பிரதீப் மற்றும் இன்பராஜ், ராம்குமார், தேவேந்திர குமார் உள்ளிட்ட போலீஸார் நீலாங்கரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்” என சென்னை நீலாங்கரை போலீஸாரிடம் ஹாஜா மொய்தீன் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
அதுபோல், ஜமால் கொடுத்த வாக்குமூலத்தில், ”ஹாஜா மொய்தீனிடம் 2017இல் வீட்டுப் பத்திரத்தை வைத்து 85 லட்சம் கடனாக வாங்கினேன். ’தற்போது வட்டியுடன் 1 கோடி 15 லட்சம் ரூபாய் பணம் தருகிறேன். பத்திரத்தை கொடுங்கள்’ எனக் கேட்டு, அவரை ஆறு மாதமாக தேடி வந்தேன்.

இந்த நிலையில், அவர் திடீரென என் சொத்தை வேறு ஒருவருக்கு விற்க முன்வந்தார். அதனால், அவரைப் பிடித்து பத்திரத்தை கேட்டேன். எனக்கு துணையாக செல்லப்பா, விஜயபாஸ்கர் மற்றும் ரவீந்திரனை அழைத்து வந்தேன்” என தெரிவித்துள்ளார்.
இது சிதம்பரம் காவல்துறைக்கு சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால் சிதம்பரம் இன்ஸ்பெக்டர் ஆறுமுகத்திற்கு தகவல் கொடுத்து வரவழைக்கப்பட்டு கடத்தப்பட்ட ஹாஜா மொய்தீன், எதிரிகள் ஜமால், செல்லப்பா உட்பட்ட ஐந்து பேரையும் நீலாங்கரை போலீசார் ஒப்படைத்தனர். சிதம்பரம் அழைத்துச் செல்லப்பட்ட அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இன்று (நவம்பர் 9) கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், “2017இல் ஜமால் என்பவர் ஹாஜா மொய்தீனிடம் கிரயம் பேசி வாங்கியது உண்மை. ’தற்போது அந்த சொத்தின் மதிப்பு ஐந்து கோடிக்கு அதிகமாக போவதால் வாங்கிய பணத்தை கொடுக்கிறேன். ஒரிஜினல் பத்திரத்தை கொடு’ எனக் கேட்டு மொய்தீனை கடத்தியிருக்கிறார்கள்” என்பது தெரியவந்துள்ளது.
வணங்காமுடி