சிறுவன் கடத்தல் வழக்கில் தம்மை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார் சஸ்பென்ட் செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம்.Kidnapping Case – Suspended ADGP Jayaram Files Petition in Supreme Court
காதல் திருமண விவகாரத்தில் இந்திரசந்த் என்ற சிறுவன் கடத்தப்பட்ட சம்பவத்தில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தியை போலீசார் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து பூவை ஜெகன் மூர்த்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணையின் போது, சிறுவன் இந்திரசந்த் கடத்தல் சம்பவத்தில் ஏடிஜிபி ஜெயராமுக்கும் தொடர்பிருப்பதாக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதனையடுத்து பூவை ஜெகன் மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராம் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.
இதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், பூவை ஜெகன் மூர்த்தியை கடுமையாக சாடிய நீதிபதி வேல்முருகன், ஏடிஜிபி ஜெயராமை உடனே கைது செய்ய உத்தரவிட்டார்.
இதனடிப்படையில் ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட்டார். திருத்தணி டிஎஸ்பி அலுவலகத்தில் ஏடிஜிபி ஜெயராமிடம் விடிய விடிய சுமார் 12 மணிநேரம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. மேலும் பூவை ஜெகன் மூர்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தம்மை கைது செய்ய பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஏடிஜிபி ஜெயராம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது.
