சிறுவன் கடத்தல் வழக்கு: கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமிடம் போலீசார் விடிய விடிய விசாரணை!

Published On:

| By Minnambalam Desk

ADGP Jayaram

புரட்சிப் பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ. தொடர்புடைய சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஏடிஜிபி ஜெயராமிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர். ADGP Jayaraman Grilled Overnight by Police!

திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர், இன்ஸ்டாகிராம் மூலம் பழகி தேனியைச் சேர்ந்த விஜயா ஶ்ரீ என்ற இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து விஜயா ஶ்ரீயை மீட்டுச் செல்வதற்காக சென்னை வந்த அவரது பெற்றோர் தனுஷின் சகோதரரான சிறுவன் இந்திரசந்த்தை கடத்திச் சென்றனர்.

ADVERTISEMENT

இது தொடர்பாக தனுஷின் தாயார் போலீசில் புகார் கொடுத்தார். இந்தப் புகாரைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இந்தக் கடத்தல் சம்பவத்தில் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ.வுக்கும் தொடர்பிருப்பதாக தெரிய வந்தது. போலீசார் கைது செய்ய முயன்ற நிலையில் ஜெகன் மூர்த்தி தலைமறைவாகிவிட்டார்.

இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவை ஜெகன் மூர்த்தி முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையில் புதிய திருப்பங்கள் ஏற்பட்டன.

ADVERTISEMENT

சிறுவன் கடத்தல் சம்பவத்தில் ஏடிஜிபி ஜெயராமுக்கும் தொடர்பிருப்பதாக நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்தனர். இதனால் பூவை ஜெகன் மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராம் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவை ஜெகன் மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராம் இருவரும் ஆஜராகினர்.

ADVERTISEMENT

இந்த விசாரணையின் போது, பூவை ஜெகன் மூர்த்தியின் நடவடிக்கைகளை நீதிபதி வேல்முருகன் கடுமையாக விமர்சித்தார். மேலும் போலீசார் விசாரணைக்கு பூவை ஜெகன் மூர்த்தி ஒத்துழைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் ஏடிஜிபி ஜெயராமை உடனே கைது செய்யவும் நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார். இதனடிப்படையில் ஏடிஜிபி ஜெயராம் நேற்று கைது செய்யப்பட்டார். இதன் பின்னர் ஜெயராமிடம் நேற்று இரவு முதல் விடிய விடிய திருத்தணி டிஎஸ்பி அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

இதனிடையே ஏடிஜிபி ஜெயராமை சஸ்பென்ட் செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த சஸ்பென்ட் நடவடிக்கைக்குப் பின்னர் ஜெயராமை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருப்பதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share