ஆண்டுதோறும் நியூயார்க்கில் உள்ள மெட்ரோபாலிட்டன் கலை அருங்காட்சியகத்தில் மெட் காலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
சர்வதேச பிரபலங்கள் பங்குபெறும் இந்த நிகழ்ச்சி அமெரிக்காவின் மிகப்பெரிய ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி மட்டுமல்ல. இதன் மூலம் மெட்ரோபாலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட்டில் உள்ள காஸ்ட்யூம் இன்ஸ்டிடியூட் வளர்ச்சிக்காக நிதி திரட்டப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டிற்கான மெட் காலா நிகழ்ச்சி இன்று (மே 6) நடைபெறும் நிலையில் ஹாலிவுட் பிரபலங்களுடன், இந்திய நட்சத்திரங்களும் பங்கேற்றுள்ளனர்.

அதன்படி பிரபல பாலிவுட் நடிகையான கியாரா அத்வானி கலந்துகொண்ட நிலையில், சில ரசிகர்களின் விமர்சனத்துக்கும் உள்ளானார்.
நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை கடந்த 2023ஆம் ஆண்டு மணந்த கியாரா அத்வானி தற்போது கருவுற்றிருக்கிறார். இந்த நிலையில் பிரபல ஆடையலங்கார நிபுணர் கௌரவ் குப்தா தயாரித்த உடையுடன் மெட் காலாவில் அவர் பங்கேற்றார்.

இது கடந்த ஆண்டு நடந்த கேன்ஸ் விழாவில் பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா ராயின் உடையுடன் ஒத்திருப்பதாக கூறி, அவரை சிலர் சமூகவலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
அதே வேளையில் தாய்மையை போற்றும் விதமாக சர்வதேச நிகழ்ச்சியில் அழகு உடையில் பங்கேற்ற கியாராவுக்கு பலர் வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.

அதே போன்று இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள இந்திய பிரபலங்களான ஷாருக்கான், பிரியங்க சோப்ரா, அலியா பட் ஆகியோரின் உடைகளும் சர்வதேச அரங்கில் கவனம் பெற்றுள்ளது.