மலையாள நடிகைகளின் பாலியல் குற்றச்சாட்டுகள் : “No என்றால் No தான்”…குஷ்பு பதிவு!

Published On:

| By Minnambalam Login1

மலையாள திரைத்துறையில் பணியாற்றும் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க  அமைக்கப்பட்ட ஹேமா கமிஷன் அறிக்கை குறித்து நடிகை குஷ்பு தனது கருத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மலையாள திரைத்துறையைச் சேர்ந்த நடிகைகள் மற்றும் கலைஞர்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல்களை விசாரித்த ஹேமா குழுவின் அறிக்கை கடந்த 19-ஆம் தேதி கேரள அரசால் வெளியிடப்பட்டது.

இந்த அறிக்கை வெளியான பின்பு பல நடிகைகள் மலையாள திரைத்துறையில் தாங்கள் சந்தித்த பாலியல் துன்புறுத்தல்களை வெளிப்படையாகத் தெரிவித்து வந்தனர்.

மலையாள நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா, மணியன்பில்லா ராஜு, எடவல பாபு, இயக்குநர் ரஞ்சித் பாலகிருஷ்ணன் போன்றவர்கள் நடிகைகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினார்கள் என சொல்லப்படுகிறது. இதில் இயக்குநர் ரஞ்சித் பாலகிருஷ்ணன் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கேரள நடிகர்களின் சங்கமான ‘அம்மா’ வின் தலைவர் மோகன்லாலும், அதன் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் நேற்று தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில், ஹேமா கமிஷன் அறிக்கை  குறித்து நடிகை குஷ்பு, “தனது எக்ஸ் தளப் பக்கத்தில் “ தாங்கள் சந்தித்த பாலியல் துன்புறுத்தல்களை  வெளிப்படையாகச் சொன்ன நடிகைகளுக்கு என்னுடைய வாழ்த்துகள்.

அனைத்து துறைகளிலும் பணிபுரியும் பெண்கள் முன்னேறத் துடிக்கும் போது, பெண்கள் பாலியல் சீண்டல்கள், துன்புறுத்தல்களுக்கு ஆளாகிறார்கள். ஆண்களும் இது போன்ற இன்னல்களைச் சந்தித்தாலும், பெண்கள் சந்திக்கும் இன்னல்களோடு ஒப்பிட்டால் அது மிகவும் குறைவு தான்.

24 மற்றும் 21 வயதாகும் எனது இரு மகள்களோடு நான் ஹேமா குழுவின் அறிக்கை, அதற்குப் பின் நடந்த விஷயங்கள் குறித்துப் பேசினேன். பாதிக்கப்பட்ட பெண்களோடு தாங்கள் நிற்பதாக அவர்கள் சொன்னது என்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்தது.

பாதிக்கப்பட்ட பெண்கள் தாங்கள் சந்தித்த துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாகப் பேசுவது விசாரணைக்கு உதவும்.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நாம் ஆதரவு தரவேண்டும். மாறாக அவர்களிடம் ஏன் இதைப் பற்றி நீங்கள் இன்று வரை பேசவில்லை? என்றெல்லாம் கேட்கக் கூடாது. எல்லாருக்கும் அப்படி வெளிப்படையாகப்  பேசுவதற்குச் சூழ்நிலையும் சந்தர்ப்பமும் அமைவதில்லை.

ஒரு தாயாக, பெண்ணாக அவர்களது வலி எனக்குப் புரிகிறது. இந்த மாதிரி கொடூரமான செயல்கள் நமது நம்பிக்கை, அன்பு போன்றவற்றின் அடிப்படையையே தகர்க்கிறது.

சில நபர்கள் நான் எனது அப்பாவால் சந்தித்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து ஏன் பேசவில்லை என்று கேட்கலாம். ஆனால் அதற்கும் எனது திரைத்துறை தொழிலிற்கும் சம்பந்தம் இல்லை. என்னைப் பாதுகாக்க வேண்டிய நபரே என்னிடம் அப்படி நடந்துகொண்டார்.

எல்லா ஆண்களுக்கும் நான் சொல்ல விரும்புவது, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு துணையாக இருங்கள்.  ஆண்களை வளர்ப்பதில் பெண்களுக்கு பெரும் பங்கு உண்டு.

பல பெண்கள்  திரைத்துறையில்  சாதிக்க வேண்டும் என்ற கனவோடு வருகிறார்கள். ஆனால் இந்த மாதிரி நிகழ்வால் அவர்களது ஆசைகள் முளையிலேயே கிள்ளி எறியப்படுகிறது.

இந்த மாதிரியான பாலியல் துன்புறுத்தல்கள் இனியும் தொடரக்கூடாது. பெண்களே வெளிப்படையாகப் பேசுங்கள். உங்களுக்கு ‘இல்லை’ என்று சொல்வதற்கு உரிமை உள்ளது.

உங்கள் பணிக்காக உங்கள் தன்மானத்தையும் மரியாதையையும் எப்போதும் விட்டுக்கொடுக்காதீர்கள்.

நான் உங்களுக்கு எப்போதும் துணையாக இருப்பேன்.” என்று  முன்னாள் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான குஷ்பு தெரிவித்துள்ளார்.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

SHARE MARKET : உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை – கவனம் செலுத்த வேண்டிய நிறுவனங்கள் என்னென்ன?

ஓடவும் முடியாது… ஒளியவும் முடியாது… வந்தாச்சு ஐ.என்.எஸ் நீலகிரி… ஸ்பெஷல் என்ன தெரியுமா?

முதல்வர் சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்… என்ன நடந்தது?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share