நாடாளுமன்ற மாநிலங்களவையில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி திடீரென வெளியேறியது பெரும் சர்ச்சையாகி உள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று முற்பகல் 11 மணிக்கு தொடங்கியது. மக்களவையில் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், சபை தலைவராக இருந்து முதல் முறையாக மாநிலங்களவையை வழிநடத்துவதால் பிரதமர் மோடி வருகை தந்திருந்தார். மாநிலங்களவை தலைவரான சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
அப்போது, முன்னாள் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ராஜினாமா குறித்தும் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பினார். இதற்கு எதிராக பாஜக எம்.பிக்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்த நிலையில் அவையில் சிறிது நேரம் அமர்ந்திருந்த பிரதமர் மோடி திடீரென மாநிலங்களவையில் இருந்து வெளியேறினார்.
மாநிலங்களவையில் கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்கும் போதே பிரதமர் மோடி அவையை விட்டு வெளியேறி அவையை அவமதித்துவிட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.
