கே.ஜி.எப். பாடல் : ராகுலுக்கு வந்த சிக்கல்!

Published On:

| By Kavi

இந்திய ஒற்றுமை பயண வீடியோவில் கே.ஜி.எப் பாடலை பயன்படுத்தியதற்காகக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டிருக்கிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.

ராகுல் காந்தி நாள்தோறும் பயணம் மேற்கொள்வது தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியிடப்படுகிறது.

அப்படி வெளியிடப்படும் வீடியோக்களில் பின்னணி பாடல்களும் ஒலிபரப்பப்படுகிறது.

கடந்த அக்டோபர் 11ஆம் தேதி ராகுல் காந்தி கர்நாடகாவில் பயணம் மேற்கொண்டிருந்தார். அன்று காங்கிரஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த வீடியோவில் கே.ஜி.எப் 2 படத்தின் ரனதீரா பாடல் பின்னணியில் இடம் பெற்றிருந்தது.

இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த எம்ஆர்டி மியூசிக் என்ற இசை நிறுவனம், காங்கிரஸ் தலைவர்களான ராகுல் காந்தி, சுப்ரியா ஷிரினேட் மற்றும் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் மீது புகார் அளித்துள்ளது.

யஷ்வந்த்பூர் காவல் நிலையத்தில் இந்த இசை நிறுவனத்தின் சார்பில் நரசிம்மன் சம்பத் அளித்த புகாரில், காங்கிரஸையும் ராகுல் காந்தியையும் விளம்பரப்படுத்த எங்கள் நிறுவன பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், சுப்ரியா ஷிரினேட் மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் எம்.ஆர்.டி. மியூசிக் நிறுவனத்தின் அனுமதி இல்லாமல் இந்த பாடலை பயன்படுத்தியுள்ளனர்.

https://twitter.com/i/status/1579838167217188865

அதனால் அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். எம்.ஆர்.டி நிறுவனம் அதன் பதிப்புரிமைக்காகவே புகார் அளிக்கிறது.

அதை தவிர்த்து வேறு எந்தவொரு அரசியல் கட்சியின் நற்பெயரைக் கெடுக்கும் நோக்கம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆரில் ஜெய்ராம் ரமேஷ், சுப்ரியா ஷிரினேட், ராகுல் காந்தி அகியோரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. மூன்றாவது நபராக ராகுல் காந்தி சேர்க்கப்பட்டுள்ளார்.

பதிப்புரிமை மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் விதிகள் மற்றும் ஐ.பி.சி பிரிவுகள் 120பி (குற்றச் சதி), 403 (நேர்மையற்ற முறையில் சொத்துக்களை அபகரித்ததற்காக), மற்றும் 465 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராகுல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நகலை பாஜகவின் தேசிய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் பொறுப்பாளர் அமித் மால்வியா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பிரியா

மாநகராட்சி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம்!

பரங்கிமலை மாணவி கொலை : சதீஷ் மீது பாய்ந்தது குண்டாஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share