லண்டனின் தென்கிழக்கு பகுதியில் உள்ள வெஸ்ட் விக்ஹாம் KFC கிளையை இயக்கும் நிறுவனம், இந்திய வம்சாவளி ஊழியரை “அடிமை” என்று அழைத்து இனப் பாகுபாடு காட்டியதற்காக சுமார் 70,000 பவுண்டுகள் (தோராயமாக ரூ.84 லட்சம்) இழப்பீடு செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மாதேஷ் ரவிச்சந்திரன், கடந்த 2023 ஜனவரியில் வெஸ்ட் விக்ஹாம் KFC கிளையில் பணியில் சேர்ந்தார்.
இரு மாதங்களுக்குப் பிறகு, அவரது விடுமுறை கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அப்போது மேலாளர் கஜன் தெய்வேந்திரம், இலங்கை தமிழ் ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிப்பேன் என்று கூறியதுடன், ரவிச்சந்திரனை “இந்த அடிமை” என்று குறிப்பிட்டதாக மாதேஷ் ரவிச்சந்திரன் குற்றம் சாட்டினார்.
இதைத்தொடரந்து தொழிலாளர் தீர்ப்பாய நீதிபதி பால் அபாட், ரவிச்சந்திரன் அநீதியாக பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், இன அடிப்படையில் நேரடி பாகுபாடு, இனத் தொடர்பான துன்புறுத்தல் மற்றும் பழிவாங்கல் ஆகியவற்றுக்கு உள்ளானதாகவும் தீர்ப்பளித்தார்.
ரவிச்சந்திரன் குற்றச்சாட்டுகளை எழுப்பிய பிறகு ராஜினாமா செய்தார், ஆனால் அதற்கு உரிய விசாரணை நடத்தப்படவில்லை என்று தீர்ப்பாயம் கண்டறிந்தது. இதனால் அவர் “மனவேதனையும் அவமானமும்” அடைந்ததாகவும், விடுமுறை மறுப்பு மற்றும் அதிக நேர வேலைக்கு கட்டாயப்படுத்தல் ஆகியவை இனப் பாகுபாட்டால் ஏற்பட்டவை என்றும் நீதிபதி தெரிவித்தார்.
இதன் காரணமாக ரவிச்சந்திரனுக்கு 66,800 பவுண்டுகள் இழப்பீடு வழங்கப்பட்டது. மேலும், கிளையை நடத்தும் நெக்ஸஸ் ஃபுட்ஸ் லிமிடெட் நிறுவனம் அனைத்து ஊழியர்களுக்கும் பணியிடத்தில் இனப் பாகுபாடு குறித்த பயிற்சி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தீர்ப்பாயம் பரிந்துரை செய்து உத்தரவிட்டுள்ளது.
