கேரளாவில் இருந்து கன்னியாகுமரிக்கு காய்கறி கழிவுகளை லாரியில் ஏற்றி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
கேரளாவில் இருந்து வாகனங்களில் ஏற்றி வந்து இறைச்சி கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. போலீசார் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலும் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் , கேரளாவில் இருந்து மருத்துவக்கழிவுகள் கொண்டுவரப்பட்டு நெல்லையில் கொட்டப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பிரச்சினையாக மாறியது. பசுமை தீர்ப்பாணையம் இந்த கழிவுகளை மீண்டும் கேரளாவுக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டது.
தொடர்ந்து, மருத்துவக்கழிவுகளை கேரளாவில் இருந்து வந்த அதிகாரிகள் வாகனங்களில் ஏற்றிக் கொண்டு சென்றனர். இதுதொடர்பாக கேரள அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து, ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்துக்கு 3 ஆண்டுகள் தடையை கேரள விதித்தது.
இந்தநிலையில், கடந்த 7 ஆம் தேதி நள்ளிரவு கேரளாவில் இருந்து கொல்லங்கோடு வழியாக கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் காய்கறி கழிவுகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்தது. நித்திரவிளை அருகே தெருவுமுக்கு பகுதியில் வந்த போது அங்கு சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் அந்த லாரி சிக்கியது.
அந்த லாரியின் பெயர், ‘நண்பன் டா…’. இதைப் பார்த்த போலீஸார், ’கேரளாவும் -தமிழ்நாடும் நண்பர்களாகத்தான் இருக்குது. உங்க நெட்வொர்க்தான் எதிரிகளா மாத்திடும் போலிருக்கு’ என்றபடியே லாரியை ஓட்டி வந்த பணகுடி பகுதியை சேர்ந்த சிவா, கிளீனர் மணிகண்டன் ஆகிய இருவரை கைது செய்தனர். லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
லாரி உரிமையாளரான வள்ளியூரை சேர்ந்த ஜோஸ்வா என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. காய்கறி கழிவுகளை கேரளாவில் இருந்து ஏற்றி அனுப்பியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்