கேரளா ரயில் தீ விபத்து: குற்றவாளி கைது!

Published On:

| By Selvam

கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகளுக்கு தீ வைத்து கொலை செய்ய முயன்ற ஷாரூக் சைஃபியை ரயில்வே காவல்துறையினர் இன்று (ஏப்ரல் 4) கைது செய்தனர்.

கேரள மாநிலம் ஆலப்புழை கண்ணூர் விரைவு ரயில் ஏப்ரல் 2-ஆம் தேதி இரவு 9.45 மணியளவில் கோழிக்கோடு அருகே எலத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ரயிலில் பயணித்த மர்ம நபர் ஒருவர் தான் பாட்டிலில் எடுத்து வந்த பெட்ரோலை பயணிகள் மீது வீசி அவர்களை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால் பயணிகள் ரயிலின் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர்.

இந்த சம்பவத்தில் 9 பயணிகளுக்கு தீக்காயம் ஏற்பட்டது. அவர்களை ரயில்வே காவல்துறையினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில், ரயில் பயணித்த எலத்தூர் பகுதியில் ஒரு வயது குழந்தை, பெண் உள்பட மூன்று பேர் ரயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்தனர். அவர்கள் மர்ம நபரின் தாக்குதலில் இருந்து தப்பிக்க ரயிலில் இருந்து குதித்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

பயணிகள் மீது பெட்ரோலை வீசி கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் தப்பி சென்றதால், அவரை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் சிறப்பு தனிப்படை குழு அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். பயணிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் குற்றவாளியின் புகைப்படத்தை வரைந்து காவல்துறை அதிகாரிகள் நேற்று வெளியிட்டனர்.

ரயில்வே தண்டவாளத்தில் மர்ம நபர் விட்டுச்சென்ற பையில் பெட்ரோல், செல்போன், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கன்னியாகுமரி, கோவளம் என்று எழுதப்பட்ட வாசகங்கள் இருந்தது.

பயணிகளை தீ வைத்து எரிக்க முயன்ற நபர் நொய்டாவைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி என்பது காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதனால் கேரள ரயில்வே போலீசார் உத்தரபிரதேசம் விரைந்தனர். உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவிற்கு சென்ற ரயில்வே காவல்துறையினர் ரயில் பயணிகள் மீது தீ வைக்க முயன்ற ஷாருக் சைஃபியை இன்று கைது செய்தனர். அவரை கேரளா அழைத்து வந்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

செல்வம்

காங்கிரஸ்-பாஜக கடும் மோதல் : 13 பேர் கைது!

அதிகரிக்கும் தெரு நாய் தொல்லை: அரசு கவனிக்குமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share