வாழை இலை… அதில் சுடச்சுட வைக்கப்பட்டிருக்கும் புட்டு. மேலே தூவப்பட்டு வெண்ணிறத்தில் மினுங்கும் தேங்காய்த் துருவலும் நாட்டுச் சர்க்கரையும். பிறகென்ன… சில நிமிடங்களிலேயே காலி செய்துவிடுவோம். பார்த்தாலே நாவூரச் செய்யும் மாயாஜாலம் இதற்கு உண்டு. கேரளாவில் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் பிரபல காலை டிபன். இதை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து அசத்தலாம்.
என்ன தேவை?
- பச்சரிசி – 2 கப்
- தேங்காய்த் துருவல் – அரை கப்
- உப்பு – தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
பச்சரிசியை அரை மணி நேரம் ஊறவைத்துத் தண்ணீரை வடிகட்டி, நிழலில் உலர்த்தவும். அரிசி பாதியளவு உலர்ந்ததும் மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து எடுக்கவும். அதனுடன் உப்பு கலந்த வெந்நீர் சிறிதளவு தெளித்துப் புட்டுமாவு பதத்துக்குப் பிசிறவும். புட்டுக் குழாயில் முதலில் சிறிதளவு தேங்காய்த் துருவலைப் போடவும். பிறகு பிசிறிய புட்டு மாவு சிறிதளவு சேர்க்கவும். அதன்மீது மீண்டும் தேங்காய்த் துருவல், புட்டு மாவு என மாற்றி மாற்றிப் புட்டுக் குழலின் முக்கால் பாகம் வரை நிரப்பவும். அதை 5 நிமிடங்கள் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். பிறகு குழாயை லேசாகத் தட்டி வெளியே எடுத்துப் பரிமாறவும்.
குறிப்பு
புட்டுடன் நேந்திரம் பழம், பொரித்த அப்பளம், பச்சைப் பயறு சுண்டல் ஆகியவற்றைச் சேர்த்துப் பரிமாறலாம். இனிப்பு விரும்புவோர் நாட்டுச் சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம்.