கேரளா மாநிலம் நிலம்பூர் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆர்யடன் சவுகத் வெற்றி பெற்றுள்ளார். இத்தொகுதியில் 4-வது இடத்துக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது. Nilambur Bypoll BJP
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நிலம்பூர் சட்டமன்ற தொகுதியில் ஜூன் 19-ந் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. அன்றைய தினம் பதிவான வாக்குகள் இன்று ஜூன் 23-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ஆர்யடன் சவுகத் 77,087 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். ஆளும் சிபிஎம் கட்சியின் வேட்பாளர் ஸ்வராஜ் 66,159 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார்.
சுயேட்சை வேட்பாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அன்வர் 19,690 வாக்குகளுடன் 3-வது இடத்தைப் பிடித்தார். இவர் தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால் நிலம்பூர் இடைத் தேர்தலை சந்தித்தது.
இத்தொகுதியில் பாஜக வேட்பாளர் மோகன் ஜார்ஜ் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அவருக்கு மொத்தம் 8,562 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
நிலம்பூர் இடைத் தேர்தல் ஏன்?
2021-ம் ஆண்டு நிலம்பூர் சட்டமன்ற தொகுதியில் சிபிஎம் கூட்டணி ஆதரவுடன் சுயேட்சையாக போட்டியிட்டு வென்றவர் அன்வர். அந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரகாஷை 2,700 வாக்குகள் வித்தியாசத்தில் அன்வர் தோற்கடித்தார்.
ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆளும் இடதுசாரி அரசையும் முதல்வர் பினராயி விஜயனையும் கடுமையாக விமர்சித்த அன்வர் தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் நிலம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து மீண்டும் சுயேட்சையாகப் போட்டியிட்ட அன்வருக்கு 3-வது இடம்தான் கிடைத்தது.