கேரளவில் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட இயற்கை இடர்பாடுகளில் மீட்புப்பணியில் ஈடுபட்டதற்காக மத்திய அரசு பணம் கேட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஏர் வைஸ் மார்ஷல் சார்பில் கேரள அரசின் தலைமை செயலருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
அதில், 2019 ஆம் ஆண்டு பெரு மழை, வயநாடு நிலச்சரிவு போன்ற இயற்கை இடர்பாடுகளின் போது, விமானப்படை ஹெலிகாப்டர் மீட்புப்பணியில் ஈடுபட்டன.
அத்தியாவசிய பொருட்களையும் தேவைப்படும் இடத்துக்கு கொண்டு செல்லும் பணியிலும் ஈடுபட்டன. இதற்காக,விமானப்படைக்கு ரூ.136.62 கோடி செலவானது. தற்போது, இந்த தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த தகவல் வெளியானதும் நாடாளுமன்றத்தில் கேரள எம்.பிக்கள் கோபமடைந்தனர். கேரளாவை சேர்ந்த அனைத்து கட்சி எம்.பிக்களும் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கேரளா இந்தியாவில் இல்லையா? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர். வயநாடு எம்.பி பிரியங்கா காந்தியும் போராட்டத்தில் இணைந்து கொண்டார்.
பிரியங்கா காந்தி இது குறித்து கூறுகையில், “பிரதமர் மோடி வயநாடு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார். மனிதாபிமானத்தோடு மத்திய அரசு நடந்து கொள்ளும் என்று எதிர்பார்த்தோம்.
மத்திய அரசு கொஞ்சம் அனுசரணையோடு நடந்து கொள்ள வேண்டும் . பாதிக்கப்பட்ட வயநாட்டுக்கு இன்னும் மத்திய அரசு நிதியுதவி செய்யவில்லை. அந்த நிதியை முதலில் விடுவிக்க வேண்டும். மக்களை மீட்பதற்கு பணம் கேட்பது தவறான செயல். கேரளாவை இந்த வகையில் நடத்துவது ஏற்றுக் கொள்ள முடியாதது” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
செம்பரம்பாக்கம், புழல் ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு… மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு!