கேரளா, கர்நாடகா… தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது!

Published On:

| By Selvam

நாடாளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்று (ஏப்ரல் 24) மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

18-வது மக்களவையை தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது.

அந்தவகையில், தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் ஏப்ரல் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 65.5 சதவிகித வாக்குகள் பதிவானது.

இந்தநிலையில் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெற உள்ளது.

கேரளாவை பொறுத்தவரை அங்குள்ள 20 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் தனித்தனியாக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர். மேலும், பாஜகவும் கேரளாவில் தங்களுக்கான வாக்கு வங்கியை தக்கவைப்பதில் முனைப்பு காட்டி வருகிறது.

குறிப்பாக கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா களமிறங்குகிறார்.

அதேபோல, திருவனந்தபுரத்தில் சிட்டிங் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் இடையே போட்டி நிலவுகிறது.

கர்நாடகா மாநிலத்தில் 14 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26-ஆம் தேதியும், மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு மே 7-ஆம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. ஆளும்கட்சியான காங்கிரஸ் மற்றும் என்டிஏ கூட்டணி ( பாஜக, ஜேடிஎஸ்) இடையே போட்டி நிலவுகிறது. மண்டியா தொகுதியில் கர்நாடகா முன்னாள் முதல்வரும் ஜேடிஎஸ் கட்சியின் தலைவருமான குமாரசாமி, பெங்களூரு தெற்கு பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா, பெங்களூரு புறநகர் தொகுதியில் கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் சகோதரர் டி.கே.சுரேஷ் களமிறங்குகின்றனர்.

இதேபோல, பிகாரில் (5), அசாம்( 5), சத்தீஸ்கர்( 3), ஜம்மு காஷ்மீர் (1), மத்திய பிரதேசம்( 7), மகாராஷ்டிரா (8), மணிப்பூர் (1), ராஜஸ்தான் (13), திரிபுரா (1), உத்தரபிரதேசம்( 8), மேற்குவங்கம் (3) தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரம் மற்றும் ரோடு ஷோ மேற்கொண்டனர். இந்தநிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் வயநாட்டில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டனர். பிரச்சாரத்தின் போது பேசிய அண்ணாமலை, “ஜூன் 4-ஆம் தேதிக்கு பிறகு இந்த தொகுதியில் மாற்றம் ஏற்படும்” என்று தெரிவித்திருந்தார். விசிக தலைவர் திருமாவளவன் கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சமூக நீதிக்கு ரோல் மாடல் தமிழ்நாடு: ஸ்டாலின் பெருமிதம்!

அமீரின் உயிர் தமிழுக்கு: ரிலீஸ் எப்போது?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share