கேரளா மாநிலத்தில் கனமழை கொட்டி வரும் நிலையில் இடுக்கியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி ஒருவர் பலியானார்.
கேரளாவில் வடகிழக்கு பருவமழை இடைவிடாமல் கொட்டி வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இடுக்கி மாவட்டம் அடிமலையில் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. தொடர் மழைகாரணமாக அப்பகுதியில் நிலச்சரிவு அபாயம் ஏற்படலாம் அச்சமடைந்த அதிகாரிகள், லட்சுமண் வீடு காலனியில் 22 குடும்பங்களை முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றினர். இவர்களில் பிஜூ மற்றும் அவரது மனைவி சந்தியா இருவரும் வீட்டில் இருந்து சில பொருட்களை எடுப்பதற்காக நேற்று இரவு லட்சுமண் வீடு காலனிக்கு மீண்டும் சென்றிருந்தனர்.
அப்போது திடீரென பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. 50 அடி உயர மலையின் ஒரு பகுதி அப்படியே சரிந்து குடியிருப்புகள் மீது விழுந்தது.
இந்த பயங்கர நிலச்சரிவில் லட்சுமண் வீடு காலனியில் இருந்த வீடுகள் அனைத்தும் பாதிப்படைந்தன. பொருட்களை எடுப்பதற்காக சென்ற பிஜூவும் அவரது மனைவி சந்தியாவும் நிலச்சரிவில் சிக்கினர். இவர்களில் பிஜூ சடலமாக மீட்கப்பட்டார். அவரது மனைவி சந்தியா படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த லட்சுமண் வீடு காலனியில் இருந்து ஏற்கனவே முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதால் 22 குடும்பத்தினரும் உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
