இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்குரிமை பறிப்பு சதியை முறியடிக்க “Nativity Card” வழங்க கேரளா அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் இதே போல “Nativity Card” வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமான SIR-ன் கீழ் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் 24.08 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தங்களை மீண்டும் சேர்க்க விண்ணப்பிக்கும் போது ”Nativity Card” என்ற ஆவணத்தை வழங்க கேரளா அரசு முடிவு செய்துள்ளது.
“Nativity Card” என்பது என்ன?
- ஒருவர் கேரளாவைச் சேர்ந்த இந்திய குடிமகன் என்பதற்கான அடையாள அட்டையாக இது இருக்கும்
- இருப்பிட சான்றிதழுக்கு மாற்றாக நிரந்தரமான இருப்பிட அடையாள அட்டையாக இதனை பயன்படுத்தலாம்
- ஒவ்வொரு வட்ட தாசில்தாரும் இந்த இருப்பிட அடையாள அட்டையை வழங்குவர்.
- மாநில அரசின் இதர சலுகைகளையும் இந்த இருப்பிட அடையாள அட்டை மூலம் பெற முடியும்
- விண்ணப்பிக்கும் அனைவருக்குமே இந்த அட்டை வழங்கப்படும்.
இருப்பினும் இதை இந்திய தேர்தல் ஆணையம் , ஆவணமாக ஏற்குமா? என்பது குறித்து தெளிவாகவில்லை.
இதனிடையே இதே போல இருப்பிட அடையாள அட்டை- “Nativity Card” ஐ தமிழ்நாடு அரசும் வழங்க வேண்டும் என்று விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக ரவிக்குமார் எம்.பி. தமது எக்ஸ் பக்கத்தில், “ 97 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தின் வாக்குப் பறிப்பு சதியை முறியடிக்க கேரள அரசு செய்திருப்பதுபோல இருப்பிடச் சான்றிதழ் (nativity certificate ) வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
