மலையாள திரையுலகில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 2018 திரைப்படத்தின் இயக்குநர் ஜூடு அந்தனி ஜோசப்பிற்கு கேரள மீனவர் கூட்டமைப்பு விருது வழங்கி கெளரவித்துள்ளது.
கடந்த மாதம் 5ஆம் தேதி வெளியானது மலையாள திரைப்படம் ’2018’. ஜூட் அந்தனி ஜோசப் இயக்கியுள்ள இப்படத்தில் டோவினோ தாமஸ், குஞ்சாகோ போபன், ஆசிப் அலி, வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, நரேன், லால், இந்திரன், கலையரசன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
வெள்ளத்தை சுற்றி இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
படம் வெளியான நாள் முதல் அனைத்து தரப்பு மக்களிடம் இருந்தும் நேர்மறையான விமர்சனங்களை பெற்ற இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ.100 கோடிகளை மிக வேகமாக வசூலித்த மலையாள படம் என்ற சாதனை படைத்தது.
தொடர்ந்து தற்போது ரூ.200 கோடியை தாண்டிய முதல் மலையாள படம் என்ற வரலாறு படைத்துள்ளது.

இத்தனைக்கும் முன்னணி ஓடிடி தளத்தில் கடந்த 7ஆம் தேதி வெளியானது. எனினும் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இத்திரைப்படம் மாபெரும் வசூல் சாதனை செய்துள்ளது.
இதனை மலையாள திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவை உலுக்கிய வெள்ள பாதிப்புக்கு இடையே மக்களிடையே நிலவும் ஏற்றத்தாழ்வு, வெறுப்பு, மனிதம், சகோதரத்துவம் ஆகியவையும் இத்திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக வெள்ள பாதிப்பின் போது, தனிச்சையாக மக்களை காப்பாற்ற போராடிய மீனவர்களின் முயற்சிகளையும் வெகுவாக இத்திரைப்படம் எடுத்துக்காட்டியுள்ளது.

இந்நிலையில் கேரள சுதந்திர மீனவர் கூட்டமைப்பு 2018 திரைப்படத்தின் இயக்குநர் ஜூடு அண்டனி ஜோசப் மற்றும் படக்குழுவிற்கு விருது வழங்கி அவரை கெளரவித்துள்ளது.
ஆலப்புழா அர்த்துங்கலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இயக்குநர் ஜூடு பேசுகையில், ”வெள்ளப்பாதிப்பு குறித்து கால் மணி நேர வீடியோவை உருவாக்க தன்னார்வ தொண்டு நிறுவனம் என்னை அணுகியது.
அப்போது ஏற்பட்ட பாசிட்டிவான அனுபவமே 2018 திரைப்படம் உருவாக காரணம். இந்த விருதை கொடுத்து என்னை அங்கீகரித்த மீனவ மக்களுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
பாஜக ஒரு சதவிகிதம் கூட வளரவில்லை! அமித்ஷா முன்பு பரபரப்பு பேச்சு!
”திமுக ஆட்சி ஊழல் ஆட்சி” : அமித்ஷா முன்பு ஐசரி கணேஷன் பேச்சு!
