துபாயில் கேரள சமூகத்தினர் நடத்திய விழாவில் முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அப்ரிடி பங்கேற்றது சர்ச்சைக்குள்ளான நிலையில் கொச்சி பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சங்கம் (CUBAA) மன்னிப்பு கோரியுள்ளது. kerala community apologies for hosting afridi
கடந்த மாதம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயர் இந்திய ராணுவம் மற்றும் முப்படைகள் தாக்குதல் நடத்தின. இதில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு பாகிஸ்தானிலுள்ள 9 பயங்கரவாத முகாம்கள் முழுமையாக தாக்கப்பட்டன.
அதன்பின்னர் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த நிலையிலும், இரு நாடுகளின் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
பாபர் அசாம், ரிஸ்வான் மற்றும் பல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் இந்தியாவில் தடுக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி, இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தானே அதிரடி தாக்குதல் நடத்தி வெற்றி பெற்றதாக கருத்து தெரிவித்து வருகிறார். மேலும் கராச்சியில் அவர் நடத்திய வெற்றிப் பேரணியும் சர்ச்சையானது.
தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வரும் நிலையில், மைசூர் பாக் கூட பாகிஸ்தான் எதிர்ப்பு காரணமாக மைசூர் ஸ்ரீ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது கவனம் பெற்றது.
இந்த நிலையில் தான் துபாயில் உள்ள கொச்சின் பல்கலைக்கழக பிடெக் முன்னாள் மாணவர் சங்கம் (CUBAA) நடத்திய விழாவில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி மற்றும் உமர்குல் கலந்துக்கொண்டது சர்ச்சையானது.
விழாவில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அப்ரிடி மேடையில் கேரளா மற்றும் அதன் உணவு வகைகளைப் பற்றி புகழ்ந்து பேசிய வீடியோவும் இணையத்தில் வைரலானது.
இதனையடுத்து பாஜகவினர் மட்டுமின்றி பலரும் விழா ஏற்பாடு செய்திருந்த கேரள சமூகத்தினருக்கு கண்டனம் தெரிவித்து கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் கொச்சின் பல்கலைக்கழக பிடெக் முன்னாள் மாணவர் சங்கம் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்புக் கோரி தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்!
அதில், “இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் பதற்றம் ஏற்படுவதற்கு முன்பே, கல்லூரிகளுக்கு இடையேயான நடனப் போட்டியின் இரண்டாவது சீசனை பாகிஸ்தான் சங்கம் துபாய் (PAD) அரங்கத்தில் நடத்த பதிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டும் இதே அரங்கத்தில் தான் முதல் சீசன் நடைபெற்றது.
இந்த நிகழ்வானது வெளிநாட்டில் வசிக்கும் கேரள சமூகம் மற்றும்ம் நமது நாட்டின் கலாச்சாரம் உள்ளடக்கிய உணர்வைப் பேணுவதற்கான ஒரு பகுதியாக நடத்தப்படுகிறது.
நிகழ்ச்சி நடைபெற்ற கடந்த 25ஆம் தேதி சமயத்தில் போர் பதற்றங்கள் ஏற்கெனவே தணிந்திருந்தன. மேலும் குறுகிய கால இடைவெளியில் நிகழ்ச்சி நடத்த மாற்று இடம் கிடைக்காததால், PAD துபாயில் திட்டமிட்டபடி நிகழ்ச்சியை நடத்தினோம்.
இந்நிகழ்ச்சி நடைபெற்ற அதே நாளில் மற்றொரு நிகழ்விற்காக அஃப்ரிடி உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் பிஏடி அரங்கத்திற்கு வந்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக எங்களது நிகழ்ச்சி நிறைவடையும் நேரத்தில், அஃப்ரிடி எந்த வித முன்னறிவிப்பும் இன்றி மேடைக்கு அழைத்து வரப்பட்டார்.
எங்கள் ஏற்பாட்டுக் குழுவோ அல்லது முன்னாள் மாணவர் உறுப்பினர்களோ யாரும் அவர்களை அழைக்கவில்லை என்பதை நாங்கள் திட்டவட்டமாகக் கூற விரும்புகிறோம். அதற்கு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட நிகழ்வு அட்டவணையே சாட்சி.
அவர்களின் திட்டமிடப்படாத வருகையால் பங்கேற்பாளர்கள் அல்லது ஆதரவாளர்களுக்கு ஏற்பட்ட குழப்பம் அல்லது சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம். இந்த எதிர்பாராத நிகழ்வினால் ஏற்பட்ட மனக்கசப்புக்கு நாங்கள் ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறோம். இதுதொடர்பாக ஒவ்வொருவரிடமும் நாங்கள் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
