நேற்று கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் சுற்றுலா பேருந்தும், கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் 57 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று மாலை 7.45 மணியளவில் கொல்லம் ஊரகப் பகுதியில் உள்ள சித்தாரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குளத்துப்புழா – மடத்தாரா சாலையில் ஒரு சுற்றுலா பேருந்தும், கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 57 பேர் காயமடைந்துள்ளனர், போலீஸார் மற்றும் மீட்பு படையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தனர். காயமடைந்தவர்களை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் ஒருவரின் நிலைமை மிக கவலைக்கிடமாக உள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் காயமடைந்த 42 பேர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், லேசான காயம் அடைந்த 15 பேர் கடக்கலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றிருந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜை தொடர்பு கொள்ள செய்தியாளர்கள் முயன்றனர். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எதிர்பாராத விதமாக நடந்த இந்த விபத்தில் 57 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களை உடனே மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஒருவருக்கு நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. காயமடைந்தவர்களுக்கு நல்ல மருத்துவ சேவையை வழங்குமாறு மருத்துவமனை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.” என்று கூறினார்.
மேலும், “காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு உதவுவதற்காக மருத்துவ கல்லூரியில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.” என்றும் தெரிவித்தார்.
