கேரளா குண்டுவெடிப்பு: டெல்லியில் இருந்து பினராயி விஜயன் உத்தரவு!

Published On:

| By christopher

Kerala blast: SIT formed NIA NSG to start probe

கேரளாவில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூடத்தில் வெடித்தது குறைந்த சக்தி கொண்ட வெடிகுண்டு என்றும்,  இதுதொடர்பாக அனைத்து கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாக கேரள டிஜிபி தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள களமச்சேரியில் கடந்த 27ஆம் தேதி தொடங்கி கிறிஸ்தவ ஜெபக்கூட்டம் நடைபெற்று வந்தது.

ADVERTISEMENT

கடைசி நாளான இன்று காலையில் மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது, திடீரென அங்கு அடுத்தடுத்து குண்டுவெடித்தது. இதில் ஒரு பெண் பலியான நிலையில், படுகாயமடைந்த 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக டெல்லியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இன்று நடத்திய தர்ணாவில் பங்கேற்றிருந்த கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் இந்த சம்பவம் குறித்து உடனடியாக தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதனையடுத்து குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைத்து  தீவிர விசாரணை மேற்கொள்ளுமாறு மாநில காவல்துறைக்கு பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் நேரில் சந்தித்து பேசிய நிலையில், தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) மற்றும் தேசிய பாதுகாப்பு படை (என்எஸ்ஜி)  உடனடியாக சம்பவம் நடந்த களமச்சேரி பகுதிக்கு விரைந்துள்ளனர்.

ADVERTISEMENT

இதற்கிடையே  கேரள மாநில டிஜிபி தர்வேஷ் சாஹேப் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

“ இன்று காலை 9.40 மணியளவில் பிரார்த்தனை நடைபெற்ற சம்ரா சர்வதேச அரங்கில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பிரார்த்தனை கூடத்தில் வெடித்தது IED வகை எனப்படும் குறைந்த சக்தி கொண்ட வெடிகுண்டு என கண்டறியப்பட்டுள்ளது.

விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு உயரதிகாரிகள் விரைந்துள்ளனர். இதுதொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணைக் குழு சார்பில் அனைத்து கோணத்திலும் தீவிர விசாரணை நடத்தப்படும்.

இந்த சம்பவத்தை வைத்து வெறுப்புவாத பிரச்சாரத்தை யாரும் சமூகவலைதளங்களில் மேற்கொள்ள வேண்டாம். அதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கேரள டிஜிபி தெரிவித்துள்ளார்.

குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக கேரளாவை ஒட்டியுள்ள கோவை, நெல்லை, தேனி, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட எல்லைகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட  தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

இந்தியாவுடன் மோதும் இங்கிலாந்து… அரையிறுதிக்கு செல்ல வாய்ப்புள்ளதா?

பிரார்த்தனை கூடத்தில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி… கேரளாவில் பதற்றம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share