குடியரசு தின விழாவில், மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிராவைத் தொடர்ந்து கேரள அரசின் அலங்கார ஊர்திகளுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகக் கேரள அரசின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினவிழா வரும் ஜனவரி 26ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது, இதனை முன்னிட்டு டெல்லியில் நடைபெறவுள்ள அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 32 அலங்கார ஊர்திகளுக்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சார்பிலும், 24 அலங்கார ஊர்திகளுக்கு மத்திய மந்திரிகள் சார்பிலும் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.
அலங்கார ஊர்திகள் வடிவமைப்பு, மய்ய கருத்து, அணிவகுப்பின் கால அவகாசம் போன்ற அடிப்படையில் தேர்வுக் குழு மூலம் தேர்வு செய்யப்படுகிறது. இந்நிலையில் குடியரசு தினத்தன்று தலைநகர் டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாநிலங்களின் பட்டியலை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஜனவரி 1ஆம் தேதி வெளியிட்டது. இதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சார்பில் 16 அலங்கார ஊர்திகள், மத்திய மந்திரிகள் சார்பில் 6 ஊர்திகள் என மொத்தம் 22 அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இதில் மேற்கு வங்கம், மகாராஷ்டிராவைத் தொடர்ந்து கேரள மற்றும் பிகாரின் அலங்கார ஊர்திகளுக்கான மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மத்திய அரசு திட்டமிட்டு மேற்கு வங்க அலங்கார ஊர்தியை புறக்கணிக்கிறது என திருணமூல் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, மேற்கு வங்க மக்கள் போராடி வருவதால், பழிவாங்கும் நோக்கத்தில், இந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மேற்கு வங்க மக்களை பா.ஜ.க அரசு அவமதித்து உள்ளது. இதற்கு, சரியான பாடத்தை மக்கள் விரைவில் புகட்டுவார்கள்” என திருணமூல் காங்கிரஸ் அமைச்சர் தபஸ் ராய் செய்தியாளர்களிடம் கூறினார்.
இதற்கு, மேற்கு வங்க மாநில பா.ஜ.க தலைவர் திலீப் கோஷ் , ”அணிவகுப்பில் கலந்து கொள்ள, மேற்கு வங்க அரசு தாக்கல் செய்த மனுவில் விதிமுறைகள் சரிவரப் பின்பற்றப்படவில்லை. இதன் காரணமாகத் தான் அந்த மனு நிராகரிக்கப்பட்டது. எல்லாவற்றையும் அரசியல் ரீதியாக பார்ப்பதை திருணமூல் காங்கிரஸ் நிறுத்த வேண்டும்” என்றார்.
கேரள சட்ட அமைச்சர் எ.கே. பாலன் “கதகளி, மோகினியாட்டம் மற்றும் செண்டை மேளத்துக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு என்று எனக்குப் புரியவில்லை. கேரளா என்ற பெயரையே வெறுக்கும் மற்றும் கூட்டாட்சி முறையை எதிர்க்கும் மத்திய அரசை இதற்கு முன்பு கண்டதுண்டா, இச்செயலானது இந்த நாட்டின் இன்றைய நிலையைக் காட்டுகிறது. நாட்டு மக்களைக் கேரளாவின் கலாச்சாரத்தைக் கண்டு ரசிக்கத் தடுப்பது ஏன்? இதில் எதாவது அரசியல் உள்நோக்கம் இருக்கிறதா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். கேரளாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மாநில சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றியதே மத்திய அரசு இப்படி பாரபட்சமாக நடந்துகொள்வதற்குக் காரணம் எனவும் கூறினார்.
மத்திய தேர்வுக்குழுவின் இந்த முடிவுக்கு மராட்டியம், மேற்குவங்கம், பிகார் மற்றும் கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.,”
